பக்கம்:கனவுப்பாலம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கனவுப் பாலம்

...'ஓ, நோ! ப்ளெஷர்! ஹெல்ப் யூ! யாருக்காவது ஏதாவது உதவி செய்வதில் ஜப்பானியர்களாகிய நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அந்த மகிழ்ச்சியை நீங்கள் எனக்குத் தந்தீர்கள்!'

அவன் மிட்ஸூயோ ஸ்டோரில் நுழைந்தபோது அயாகோவைக் காணவில்லை. யாரோ ஒருத்தி உட்கார்ந்திருந்தாள். நடுத்தர வயது. அயாகோவைப் போலவே அழகு. அதே ஜாடை. கண்கள் சோகமாய்ச் சிரித்தன. 'அம்மாவாயிருக்குமோ?'

கடை நிறைய புத்தர் சிலைகள், பித்தளை விளக்குகள், மர பொம்மைகள், சீன ஜாடிகள், கம்பளங்கள்....

அவன் அயாகோவைத் துழாவினான். காணவில்லை. ஏதோ வாங்க வந்தவனைப் போல் நடித்து கடைப் பொருள்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே நேரம் போக்கினான். அங்கே வைத்திருந்த அழகான சீன ஜாடி ஒன்று அவனைக் கவர்ந்தது. கொஞ்சம் பெரிய ஜாடி. அதை எடுத்துப் பார்த்தபோது அதன் முடி தவறிக் கீழே விழுந்து சுக்கலாயின.

'ஸாரி, ஸாரி!' என்றான்.

அந்த அம்மாள் எழுந்து ஓடி வந்தாள். ஜப்பான் மொழியில் ஏதோ சொன்னாள். திடீரென்று ஒரு கிழவி வந்து அந்தத் துண்டுகளைப்பொறுக்கி எடுத்தாள்.

'அநியாயமாய் உடைந்து போயிற்றே!' என்ற முகபாவம்.

'தவறு என்னுடையதுதான். நான் தான், உடைத்து விட்டேன். பணம் தந்து விடுகிறேன். இது என்ன விலை?' என்று கேட்டான்.

'ஆறாயிரம் யென்' என்ற சீட்டு அதன் கழுத்தில் கட்டியிருந்தது.

'பரவாயில்லை.நீ பணம் தர வேண்டாம். உன்னைப் பார்த்தால் ஒரு இந்தியின் மாதிரி தெரிகிறது' என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/4&oldid=1064331" இலிருந்து மீள்விக்கப்பட்டது