பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 73
48 தமிழே எனக்கு இறைவன்!
தமிழே எனக்கிங் குயிர்மலர்ச்சி - செந்
தமிழே எனக்கிங் குடலம்!
தமிழே எனக்கிங் குள்ளுணர்வு - பைந்
தமிழே எனக்கிங் குலகம்!
தமிழே எனக்குக் கருத்தெழுச்சி! - தீந்
தமிழே எனக்குப் பார்வை!
தமிழே எனக்குச் செவியோசை! - நற்
றமிழே எனக்குப் பிறவி!
தமிழே எனக்கு முழுமுதல் தாய்! - முத்
தமிழே எனக்குத் தந்தை!
தமிழே எனக்குக் குரு, கல்வி! - நந்
தமிழே எனக்குக் காட்சி!
தமிழே எனக்கிங் குயிர்த்துணைவி! - இன்
தமிழே எனக்குக் குடும்பம்!
தமிழே எனக்கிங் குயிரின்பம்! - வண்
தமிழே எனக்குக் குழவி!
தமிழே எனக்கிங் குறவுரிமை - வன்
தமிழே எனக்குச் சுற்றம்!
தமிழே எனக்கிங் குயர்வாழ்க்கை! - அந்
தமிழே எனக்குத் தொண்டு!
தமிழே எனக்கோர் எழுத்துறவு! - இயற்
றமிழே எனக்குப் பேச்சு!
தமிழே எனக்கோர் அறிவியக்கம்! - இசைத்
தமிழே எனக்குயிர் மூச்சு!
தமிழே எனக்கிங் குயிர்நட்பு! - நடத்
தமிழே எனக்கு விருந்து!
தமிழே எனக்கு வினையாடல் - உயிர்த்
தமிழே எனக்கு நனவு!
தமிழே எனக்குத் திருமறை நூல் - பழந்
தமிழே எனக்குக் கனவு!
தமிழே எனக்கு மத மெய்ம்மம்! - அருந்
தமிழே எனக்கிங் கிறைவன்!
-1978