உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 கனிச்சாறு – முதல் தொகுதி


49  தமிழ் கெடுப்பானைக் கெடுப்பான்
தமிழைக் காப்பான்!

தரங்குறைந்த எழுத்தெழுதிப்
பணந்திரட்டும் நோக்கத்தால்
தாள்தொடங்கு கின்றார், இங்கே!
உரங்குலைந்த உள்ளத்தார்-
நரம்பிளைத்த உடலத்தார்-
வெற்றுணர்வால் ஓடோ டிப்போய்,
குரங்கினம்போல் தாவியதை
வாங்கி,அறைத் தாழடைத்துத்
தனிப்படித்து விடாய்தணிப்பார்!
இரங்குகின்றோம்! ஓ! ஓ! ஓ!
இளைஞர்களே! இளைஞைகளே!
வாழ்வென்ப திதுவே தானோ?

கயமையினை எழுத்தாக்கிக்
கற்பிழப்பைக் கதையாக்கிக்
காமத்தைக் கடையில் விற்கும்
நயமில்லா இப்போக்கை-
முள் மரத்தை - நந்தமிழர்
முளையினிலே நசுக்கல் வேண்டும்!
வளமிழக்கச் செய்கின்ற
இந்நோய்க்கு வாய்த்தநறு
மருந்தேசெந் தமிழ்மருந்தாம்!
கயமையினைத் தமிழெழுத்தால்
விலைபோக்கும் தமிழ்கெடுப்பா
னைக்கெடுப்பான் தமிழைக் காப்பான்!

-1978

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/101&oldid=1512972" இலிருந்து மீள்விக்கப்பட்டது