உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 கனிச்சாறு – முதல் தொகுதி

57  தமிழைக் கொல்லும் மூடர்களே!

கலப்புத் தமிழும் தமிழாமோ? - இழி
கயமைச் செயலும் செயலாமோ?
அலப்புச் சொல்லும் இசையாமோ? - வீண்
ஆரவாரமும் வாழ்வாமோ?

கொச்சைத் தமிழும் தமிழாமோ? - கடுங்
கொடுமை உரையும் உரையாமோ?
பச்சைச் சொல்லில் பாலுணர்வைத் - தாள்
பதிக்கும் இதழும் இதழாமோ?

போலித் தமிழும் தமிழாமோ? - வெறும்
புன்மைப் பேச்சும் பேச்சாமோ?
கூலிப் பிழைப்பும் பிழைப்பாமோ? - ஒரு
கொள்கைச் சிதைவும் சிறப்பாமோ?

கீழ்மைப் பேச்சும் தமிழாமோ? - சிறு
கிறுக்குத் தனமும் அறிவாமோ?
தாழ்மைச் செயலால் பிழையுரையால் - செந்
தமிழைக் கொல்லும் மூடர்களே!

-1980

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/109&oldid=1419266" இலிருந்து மீள்விக்கப்பட்டது