பக்கம்:கனிச்சாறு 1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 கனிச்சாறு – முதல் தொகுதி

59  தமிழ்மொழி வாழ்க!

எடுப்பு


தமிழ் மொழி வாழ்க!
தமிழினம் வாழ்க!
தமிழ்நாடு வாழ்கவே வாழ்க!

தொடுப்பு


அமிழ்தினும் இனிய அருந்தமிழ் வாழ்க!
அதனினம் நிலமென்றும் வாழ்க! வாழ்க! (தமிழ்)

முடிப்பு


தொன்மைத் தமிழ்மொழி! முன்மைத் தமிழ்மொழி!
தூய்மையும் தாய்மையும் வாய்ந்தமொழி!
மென்மைத் தமிழ்மொழி! மேன்மைத் தமிழ்மொழி!
மேவும் இலக்கியம் நிறைந்த மொழி! (தமிழ்)

இளமைத் தமிழ்மொழி! இனிமைத் தமிழ்மொழி!
எளிமையும் இயன்மையும் தோய்ந்தமொழி!
வளமைத் தமிழ்மொழி! வன்மைத் தமிழ்மொழி!
வாழ்வியல் அறவியல் ஆய்ந்தமொழி! (தமிழ்)

அறிவுத் தமிழ்மொழி! அழகுத் தமிழ்மொழி!
ஆன்றமெய் யறிவியல் சான்றமொழி!
செறிவுத் தமிழ்மொழி! செம்மைத் தமிழ்மொழி!
செப்பமும் நுட்பமும் சேர்ந்தமொழி! (தமிழ்)

திண்மைத் தமிழ்மொழி! உண்மைத் தமிழ்மொழி!
செழுமையும் முழுமையும் ஏய்ந்தமொழி!
ஒண்மைத் தமிழ்மொழி! உயர்மைத் தமிழ்மொழி!
ஓர்மையும் சீர்மையும் அமைந்தமொழி! (தமிழ்)

பாண்மைத் தமிழ்மொழி! பரவைத் தமிழ்மொழி!
பழமையும் புதுமையும் இணைந்தமொழி!
ஆண்மைத் தமிழ்மொழி! பெண்மைத் தமிழ்மொழி!
அன்றையும் என்றையும் நின்றமொழி! (தமிழ்)

-1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/111&oldid=1512967" இலிருந்து மீள்விக்கப்பட்டது