பக்கம்:கனிச்சாறு 1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 கனிச்சாறு – முதல் தொகுதி

62  தமிழ்ச் 'சங்கம்' தோற்றுவித்துத்
 தமிழ்த் தமுக்கை அடிக்கின்றார் !

தமிழ்வளர்ச்சித் துறையும்தமிழ் அகரமுத லித்துறையும்
தமிழ்ப்பல்க லைக்க ழகமும்,
தமிழ்ப்பண்பாட் டுத்துறையும், உலகத்தமிழ் ஆராய்ச்சி
நிறுவனமும் - அறுக்க மாட்டான்
இமிழ்க்கின்ற அரிவாள்ஆயிரம் இடுப்பில் சொருகினாற்போல்
இருக்கின்ற நிலையில், ‘உலகத்
தமிழ்ச்சங்கம்' தோற்றுவித்துத் தமிழ்த்தமுக்கை அடிக்கின்றார்,
தமிழரசார்; வியப்பென் சொல்வோம்!

எதனாலே தமிழ்வளரும் எவராலே தமிழ்மீளும்
என்றுணரும் மதுகை யற்றார்
இதனாலே தமிழ்வளர்ப்போம் என்றுலகத் தமிழ்ச் ’சங்கம்'
எழிலுறவே இமைப்பத் தோற்றி,
அதனாலே பகற்கொள்ளை அடித்திடவும் முனைந்திட்டார்
அறிஞரென அமர்ந்தும் கொண்டார்!
பதனீரால் பனைவெல்லம் காய்ச்சுதல்போல் காய்ச்சுவரோ,
பைந்தமிழை? - விளைவென் பார்ப்போம்!

நார்நாராய்த் தமிழ்கிழிக்கப் போகின்றார், நம்புலவர்!
நந்தமிழும் வாழ்ந்த திங்கே!
ஊர்ஊராய்ப் பாட்டரங்கம் பட்டிமன்றம் கருத்தரங்கம்
எனும்பெயரில் உளறல் கேட்கப்
பேர்பேராய்ச் சுவரொட்டி பேரளவில் அச்சடித்துப்
பெரும்புரட்சி செய்வார் போலும்!
யார்யாரோ அழித்ததமிழ் இன்னவரால் திரண்டுருண்டு
யாப்புறவே வளரும் காணீர்!

உலகமெலாம் தமிழ்செழிக்கச் செய்வரினி; உலகிலுள்ள
ஒண்தமிழர் ஒன்று கூடி
முலமுலென முன்னேறப் போகின்றார்; முதலமைச்சர்
முனைந்துவிட்டார் தமிழ்வ ளர்க்க!
கலகமென ஒன்றில்லை; அழிவில்லை தமிழர்போய்க்
கூலிகளாய்க் கருகும் நாட்டில்
பொலபொலென அடடா,ஓ! தமிழ்ப்பொழுது விடியுமிங்கே!
திறந்திருங்கள் பொக்கை வாயை!

-1986
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/115&oldid=1513094" இலிருந்து மீள்விக்கப்பட்டது