பாவலரேறு பெருஞ்சித்திரனார்
கக
இக் கனிச்சாறு தொகுதிகளில், தமிழ், இந்தி யெதிர்ப்புப் பற்றிய பாடல்கள் முதல் தொகுதியாகவும், இன எழுச்சிப் பாடல்கள் இரண்டாந் தொகுதியாகவும் அமைந்துள்ளன; நாட்டுரிமை பற்றிய மூன்றாந் தொகுதியில் நாட்டுரிமை, தமிழீழம் என்னும் பிரிவுகளிலான பாடல்கள் இடம்பெற்றுள்ளன; இளைய தலைமுறை, பொதுமை, இயக்கம் ஆகியன பற்றிய பாடல்கள் நான்காந் தொகுதியாகவும், குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழி மாலை என்னுந் தலைப்புகளில் அமைந்த பாடல்கள் ஐந்தாந் தொகுதியாகவும் கொள்ளப்பெற்றுள்ளன; ஆறாந் தொகுதியாவது காதல், இயற்கை, இறைமை என்னும் பிரிவுகளைக் கொண்ட பாடல்கள்; தன்னிலை விளக்கம், பெருமக்கள் சிறப்பு, திருநாள் வாழ்த்து, திருமண வாழ்த்து, மதிப்புரைகள் முதலியனவாகிய பாடல்கள் ஏழாந் தொகுதியில் வைக்கப் பெற்றுள்ளன. பாட்டரங்கப் பாடல்கள் எட்டாந் தொகுதி.
2009இல் தமிழக அரசு, பாவலரேறு அவர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கிப் பெருமை கொண்டது. அதனால் அவர்தம் படைப்புகளைப் பலரும் வெளியிட வாய்ப்பு ஏற்பட்டது. எனினும் வெளிவராத பாடல்கள் பலவற்றையும் நாம் வெளியிட்டால் மட்டுமே மற்றவர்கள் வெளியிட வாய்ப்பு ஏற்படும் என்பதால் நாம் முழுமையாக வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்டது.
எட்டுத் தொகுதிகளையும் ஒரே நேரத்தில் வெளியிடுவதற்குப் பெரும் பொருள் தேவைப்பட்டதால், முன்வெளியீட்டுத் திட்டம் 'தென்மொழி' யில் அறிவிக்கப் பெற்றது.
தென்மொழி அன்பர்கள் பலரும் முனைந்து தொகை அனுப்பி வைத்திருந்தனராயினும், அத்தொகை, தேவையான எல்லைக்கு மிகவும் குறைவான அளவையே நிறைவு செய்தது. நாமும் அந்தக் காலக்கட்டத்திற்குள் வெளியிட இயலாமல் சற்று காத்திருக்கநேர்ந்தது.
அவ்வாறு காத்திருக்கும் காலத்திற்குள்ளும் எதிர்மம், அச்சுக்கூலி, தாள் இவற்றின் விலையேற்றம் அளவு கடந்து உயர்வும் பெற்றன. அவற்றையும் நெருக்கியே வெளியிட வேண்டியதாயிற்று.
இனி, தமிழ்மக்கள் தம் மொழிநலத்தையும் வாழ்வியற் சிறப்புகள் சீரழிவுகள் ஆகியவற்றையும் உணர்ந்து, அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்து, எழுச்சிபெற்று, இனநலம் பேணி, நாட்டுரிமை பெற்று வாழ்வாங்கு வாழ வகைசெய்யும் கருத்துத் தெளிவும் உணர்வுச் செழுமையும் வாய்ந்த பாடல் திரட்டான இக் கனிச்சாறு தொகுதிகளைத் தமிழ்கூறும் நல்லுலகம் வரவேற்றுப் பயன்கொண்டு சிறக்கும் என்று நம்புகின்றோம்.
-தென்மொழி பதிப்பகத்தினர்