இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 93
65 உரம் இழந்தீரா?
நிலை தளராதா? - இந்திக்
களை உலராதா?
நெடு நெடுவென, தளதளவெனப்
பயிர் வளராதா? - தமிழ்ப்
பயிர் வளராதா?
அறம் சிறக்காதா? - நெஞ்சில்
மறம் பிறக்காதா?
அன்று பிறந்த தமிழர் போலத்
திறம் இருக்காதா? - மானத்
திறம் இருக்காதா?
இகழ் நடக்காதா? - இன்பப்
புகழ் கிடைக்காதா?
இரும்புத் தோள்கள் முனைந்துவிட்டால்
துயர் துடைக்காதா? - நாடு
உயர் வடையாதா?
வெயர்வை சிந்தீரா? - உங்கள்
அயர்வை நொந்தீரா?
வீட்டுக் கதவைத் திறந்து கொண்டே
படைக்கு முந்தீரா? - துயர்
துடைக்க வந்தீரா?
உரம் இழந்தீரா? - அடிமைத்
திறம் விழைந்தீரா?
உலகை யாண்ட தமிழர் நீவிர்
உடல் குலைந்தீரா? - நாடு
கெடல் முனைந்தீரா?
-1959