இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 95
69 தமிழ்ப் பயிரில் இந்தித் தீ!
செழிக்கின்ற தமிழ்ப்பயிரில் இந்தியெனும்
செந்தீயை மூட்டி விட்டே,
அழிக்கின்றார் தமிழினத்தை! ஆரென்று
கேட்பதற்கோ ராளிங் கில்லை!
மொழிக்கின்று வந்தநிலை தவிர்க்கிலமேல்
தமிழ்நாட்டை அடிமை சூழும்!
ஒழிக்கின்ற சூளுடனே கொல்களிறு
போல் எழுந்து முனைவீர் இன்றே!
-1963
70 தமிழா, எப்படி ?
என்னபடி மக்களெல்லாம் எதிர்த்தாலும்,
தமிழ்நாட்டில் இந்தி யைத்தாம்
சொன்னபடி புகுத்துவதே முதற்படியாய்
வடநாட்டார் கொண்டு விட்டார்!
அன்னபடி நடந்திடவே அமைச்சரெல்லாம்
அடிபணிந்தார்! தமிழா, இன்னும்
இன்னபடி நீ கிடந்தால் எப்படித்தான்
மேற்படியை எட்டு வாயோ?
-1963