உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  97


73  செந்தமிழ் தந்த சிறை!

எந்தமிழ் மொழிக்கும் எந்தமி ழர்க்கும்
வந்த இழிவெலாம், வருந்துயர் எல்லாம்
துடைத்திடச் சிறைக்குள் தொண்ணூ றாண்டுகள்
அடைத்துக் கிடக்கப் படுவேன் என்னினும்
உள்ளமும் உயிரும் உவந்துடன் ஒப்புவேன்!
கள்ள மிலாவென் மனைவியும் மக்களும்
என்னைப் பிரிந்திட வேண்டும் என்னினும்
அன்னைத் தமிழ்க்கென அகமகிழ்ந் திசைவேன்!

எவ்வாற் றானும் எந்தமிழ் நாடும்
செவ்விய தமிழும் சிறப்புற் றிலங்க
வேண்டும் என்பதே என்னுயிர் விழைவாம்!
ஈண்டியான் பெற்ற ஈரிரு மாதக்
கடுஞ்சிறை வாழ்வு எம் கன்னித் தமிழையும்
கொடுந்துயர்ப் பட்ட எந்தமிழ்க் குலத்தையும்
ஒருபடி உயர்த்தும் என்னின் உண்மையாய்
இருபடி வாழ்ந்தேன் என்றே இயம்புவேன்!

இவ்வுடல் தானும் இதனுள் ஓடும்
ஒவ்விய குருதியும் உணர்வும் நரம்பும்
எந்தமிழ்த் தாய்க்கும் எந்தமி ழர்க்கும்
சொந்தம் என்பதால் சோர்வெனக் கில்லை!

என்னிலை தமிழர்க்கு இனியநல் உணர்வினை
முன்னினும் பன்மடங் காக உயர்த்துக!

தன்னிலை மறந்த தமிழர்க்கு என்சிறை
முன்னிலை உணர்த்தி முழுவுணர் வூட்டுக!

அற்றைப் பெருநிலை அறவே மறந்து
குற்றுயி ருற்றயெந் தமிழ்க்குடி உயர்க!

செந்தமிழ் நாடும் செந்தமிழ் மக்களும்
முந்தை துறந்த மொய்ம்புகழ் மீண்டும்
முளைத்துக் கிளைத்து மூண்டுபுடை விரிக!
களைத்துக் கிடக்கும் எம் தமிழுளம் களிக்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/124&oldid=1513126" இலிருந்து மீள்விக்கப்பட்டது