பக்கம்:கனிச்சாறு 1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  99


74  சிறையகம் புக்க காதை !

“அறைந்திரை வீழ்த்திய அரிமா ஏற்றின்
பிறழாப் பெருநடை பீடுறப் பயின்று,
மதிமுகம் உவப்ப மலர்விழி ஒளிர,
எதிர்வரும் ஒள்ளியோய் இரு”மென இருத்தி,
'அலைகோற் கொடியரும், அழல்மடுத் தாரும்,
கொலைகொள் நினைவின் நெஞ்சழிந் தாரும்,
இரந்துண் வாழ்க்கை இழிவெனக் கொண்டு
கரந்தூண் அயிலுங் கவடறிந் தாரும்,
கனிவிலா நெஞ்சின் கங்குற் கள்வரும்
முனிவுறு போக்கின் முறை பிறழ்ந் தாரும், 10
அடுநறாக் காய்ச்சி அகப்பட் டாரும்,
விடுதல் இலாதது விழைந்துண் டாரும்,
மலிவுறு கவடரும், மங்கையர் மானம்
வலிவுறப் பற்றி வாங்கி யோரும்
கறையகம் போகக் காவற் படூஉம்
சிறையகம் புக்கினிர் செய்ததும் என்'னெனக்
கேட்பீ ராயின் கிளத்துதற் கேண்மோ;

நாட்பட நாட்பட நல்லவை நாடும்
சால்புடை நெஞ்சின் சான்றோர் தாமும்
நூல்பயில் அறத்தின் தோற்றோர் தாமும் 20
கடைபெறக் கிடக்கும் கயவர் ஆணையின்
அடைபெறக் கிடப்பினும் அதுவியப் பன்றே!

மூடரும் முரடரும் முனைந்தர சாளும்
நாடுநா டின்றி நலிந்த பின்றை
புரையிலார் தமக்குப் புக்கிலும் உண்டோ?
வரைவிலா தோங்கின் வன்மையும் புன்மையும்!
சிறையகத் திருப்போர் சீரகத் துள்ளார்!
இறையகத் திருப்போர் எஃககத் துள்ளார்!


காலச் சுழலினும் கயமை வாழ்வினும்
சாலப் புரைவோர் சால்புடைப் பெரியோர்! 30
புல்லுரை பகர்வோர் புலமைச் செவ்வியர்!
நல்லுரை சொல்வோர் நாயினுங் கீழோர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/126&oldid=1513161" இலிருந்து மீள்விக்கப்பட்டது