உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 கனிச்சாறு – முதல் தொகுதி


தீர்ப்பு வழங்கித் திடுமெனக் கடுஞ்சிறை
தள்ளி அடைத்துத் தொடையைத் தட்டலால்
உள்ள கருத்ததன் உயர்வை இழக்குமா? 170
இல்லை அதுதான் இன்றொடு சாகுமா?
தொல்லை தருதலால் நெஞ்சுரம் தொலையுமா?
அரசநாற் காலியில் அமர்ந்துளார் முன்னர்
முரசறைந் திதனை முழக்குவேன் கேளீர்!

தமிழக நிலத்தில் இந்தியைத் தூவுதல்
உமிவிதைத் துழைப்பதை ஒத்திடும் என் பேன்!

அரங்கிலா நும்மின் அரசியல் நாடகம்
குரங்கு கை மாலையாக் குலைவதோ உண்மை!

ஒற்றுமை ஒற்றுமை என்றே உழைத்துக்
குற்றுமி ஊதிக் கொதியுலை யேற்றி 180
வெற்றிலை விரித்து விருந்திடல் போல
உற்ற உணர்வையும் ஒழித்திடல் உண்மை!


நெடும்பயன் கருதா நெறியிலா தீரே!
கடுஞ்சிறை யிடினும் கழுத்தைச் சீவினும்
உற்ற கருத்தின் உண்மை மாறுமா?
பெற்ற தாய்மேல், பெருந்தமிழ் மொழிமேல்
ஆணையிட் டிதனை அறைகுவேன் கேளீர்!
கோணை மொழியினார் கொள்கைகள் நில்லா!

மொழியெனப் படுவது உணர்வினால் முளைப்பது!
மொழியெனப் படுவது மாந்தரின் முனைப்பு! 190
மொழியெனப் படுவது கல்விக் கடிப்படை!
மொழியெனப் படுவது பண்பொளிர் விளக்கம்!
மொழியெனப் படுவது உள்ளுயிர் முழக்கம்!
மொழியெனப் படுவது இனநல முயக்கம்!


அத்தகு சிறந்த ஆயிர மொழிகளுள்
செத்தறி யாத சீரிள மைத்திறம்,
இலக்கணச் சீர்மை, இலக்கியக் கொழுவளம்,
துலக்கரு மெய்ம்மை, துள்ளும் எழில்நலம்,
உரைப்பதற் கினிமை, உள்ளுணர் வுக்கொளி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/131&oldid=1419251" இலிருந்து மீள்விக்கப்பட்டது