உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  111


81  பொங்காதோ உள்ளம் புலர்ந்து!

‘எந்த ஓர் ஆற்றலும் இந்தித் திணிப்பையினி
வந்து நிறுத்துதல் வாயாதாம்! - என்றே, உன்
இந்திரா காந்தி இயம்புகிறார், செந்தமிழா!
இந்திரா காந்தி இயம்புவது, நீ, உன்றன்
சொந்த நலன் கருதிச் சோர்வுற்ற தன்மையன்றோ?

சொந்த நலன்கருதிச் சோர்வுற்ற தன்மையினால்
நந்தமிழ்த் தாய்க்கே நலிவுவந்து சேராதோ?
நந்தமிழ்த் தாய்க்கே நலிவுவந்து சேர்ந்திடுமேல்
எந்தமிழ்ப் பேரினமும் என்றும் அடிமையன்றோ?
எந்தமிழப் பேரினந்தான் என்றும் அடிமையுற்றால்
இந்த நிலமும் போம்! ஏய்ந்தநலம் எல்லாம்போம்!
அந்தப் பொழுதிலுனை ஆர்வந்து காத்திடுவார்?

அந்தப் பொழுதிலுனை ஆர்வந்து காத்திடினும்
இந்த மொழியும் இனமும் இருந்திடுமா?
இந்த மொழியும் இனமும் இல்லையென்றால்,
எங்குன் ஒளியுருவம்? எங்குன் பெருமைநலம்?
எங்குன் வரலாறு, எங்கேதான் நீயிருப்பாய்?

இங்கா கிலுமுன்றன் எண்ணம் மலரட்டும்!
இங்கா கிலுமுன் இனநலமும் ஓங்கட்டும்!
மங்காத செந்தமிழின் மாட்சி விளங்கட்டும்!
பொங்காதோ உள்ளம் புலர்ந்து!
-1980

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/138&oldid=1513120" இலிருந்து மீள்விக்கப்பட்டது