114 ☐ கனிச்சாறு – முதல் தொகுதி
84 வன்பு வடவரை நடுங்கிட வைப்போம்!
ஆயிரந் தடவை இந்தியை அழித்தோம்!
ஆயிரந் தடவை மீண்டும் எழுதினர்!
ஆயிரந் தடவை இந்தியை எதிர்த்தோம்!
ஆயிரந் தடவையும் மீண்டும் புகுத்தினர்!
எந்தவோர் தடவையும் எதிர்த்த எதிர்ப்பால்
இந்தி நுழைவு நின்றது இல்லை;
இந்திய மடயர்கள் அதிர்ந்ததும் இல்லை!
இந்தி ஒன் றன்று;நம் எந்த எதிர்ப்பையும்
இந்திக் காரர்கள் உணர்ந்ததும் இல்லை;
எந்தக்கோ ரிக்கையும் ஏற்றதும் இல்லை!
வடநாட் டாருக்குநாம் வாயிலாப் பூச்சிகள்;
விடமாட் டார்; அவர் வெறி, வீம்பு அப்படி!
ஒரேவொரு முடிவுதான் உன்மத்த ருக்கே!
“அரே,அரே இந்தி முண்டமே! ஆள்கின்ற
பிடாரியே! அன்பிலாப் பேதையே! இதுகேள்;
அடாவடித் தனமாய் அடக்கியும் ஒடுக்கியும்
எங்களை அடிமையாய் எண்ணி வருத்துவாய்!
எங்களுக் குன்மேல் நம்பிக்கை இல்லை!
வாழவும் விடாமல் சாகவும் விடாமல்
ஈழத் தமிழர் படுகின்ற இன்னல்போல்
எங்கட்கு நீ இடர் செய்துகொண் டிருக்கிறாய்.
இங்குஉன் ஆட்சியில் இருப்பதற் கில்லை.
எங்கள் நிலத்தில் எங்கள்ஆ ளுமையே
தங்கி யிருக்கவும் தமிழினம் தழைக்கவும்
தனித்தமிழ் நாட்டுக்கு விடுதலை தா” - வென
முனித்த குரலொடு முழங்கலே முறையாம்!
அன்புத் தமிழரே! அக்குரல்
வன்பு வடவரை நடுங்கிட வைக்குமே!
-1985