12 ☐ கனிச்சாறு – முதல் தொகுதி
43.
தீஞ்சுளைக் கனியின் சாறே! தென்றலே! தென்ற லூரும்
பூஞ்சுனைப் புனலிற் றோயும் புதுமண மலரே உந்தும்
ஊஞ்சலின் அசைவால் உள்ளம் உணர்ந்திடு மின்ப மேவான்
றோய்ந்துவீ ழருவியெல்லாந் தோகையுன் தோற்ற மன்றோ?
44.
துருவுங்காலென்னின் மிக்க துன்பத்தைக்கொண்டாய்! கொண்ட
அரும்பெறு நூற்செல் வத்தை ஆழிக்குப் பறிகொ டுத்தே
பெருந்துன்பம் மேவுநீண்ட பிணிவாழ்க்கை யுடையாய் என்பால்
வருந்துன்பம் போக்க நீயும் வல்லையோ? மிடிகொண் டாளே!
45.
தூறலெந் துன்பமென்னின் தொலையாப் பேய் மழையுன் துன்பம்.
பீறலெந் துன்பெனில், நாண் பேணவுங் கூறை யில்லாய்!
ஏறலெந் துன்ப மென்னின் ஏறிய துன்பங் கொண்டாய்
ஆறலெந் துன்ப மென்னின் ஆற்றாத துயர்கொண் டாயே!
46.
தொங்குநீர்க் கோடைக் காகுந் திரண்டுள நூற்க ளெல்லா
மிங்குளோர் வெம்மை போக்கு மின்னிழ லாகும் நாறுஞ்
சங்குசாய் ஆழி யுண்ட நூற்கோடி யென்றால் வந்தே
தங்கினார் மேய்ந்த நூற்கள் கணக்கிலை; தமிழின் தாயே!
47.
தேடிய நூற்செல் வத்தைத் திரட்டியே அணிகள் செய்து
நீடிய வின்பந் துய்த்துப் போந்தனர் சான்றோர்; ஈண்டு
நாடிய கள்ளர் எல்லாம் நாட்குநாள் நினைச்சி தைத்து
வாடிய நெஞ்சாய் விட்டார் வாட்டம் வான் கொள்ளா தம்மா!
48.
தையலே எஞ்சிநின்ற செம்பொருள் நூற்செல் வங்கள்
கையள வேயா னாலுங் கணக்கிலா மதிப்புச் சூழும்.
உய்விலை யென்கின் றேனான் உயிரிலை என்கின் றாய்நீ
நையலி னின்று மீளும் நாளெந்நாள் அறியே னம்மா?
49.
தொன்மையை எண்ணுங் காலைத் துவள்கின்றேன் ஐயோ வந்தார்
புன்மையை உன்னுங் காலைப் புரள்கின்றேன் தீயோர் உன்றன்
நன்மையைக் காணார் அல்லால் நலவினை ஏற்றுவார் கொல்.
என்மை சூழ் இன்னல் உன்றன் இடரிலோர் துளியே அம்மா!