பாவலரேறு பெருஞ்சித்திரனார்
௩
முன்னுரை
இயற்கை ஓர் ஒழுங்குடையது. நிலம் நெறியான ஓர் இயல்போட்டத்தை உடையது. கதிரவனும் விண்மீனும் ஓர் ஒழுங்கான அசைவை உடையன. புடவியும் பேரண்டமும் அவற்றுள் இயங்கும் பல்லாயிரங்கோடி இயற்கைக் கோளங்களும் சுடர்த் தொகுதிகளும் சிறிதே ஒழுங்கின்றி இயங்கத் தொடங்கினும் உடனே பேரழிவு நேரும்.
இவ்வியற்கை நிலையினைப்போல், இயற்கையுட்பட்ட அனைத்து நிலைகளிலும் அதனதற்குப் பொருந்திய ஓர் ஒழுங்கு கடைப்பிடிக்கப் பெறுதல் வேண்டும். இயற்கை அறிவிக்கும் இவ்வொழுங்கு சிதைவுறின், அச் சிதைவுக்கேற்ப, படிப்படியான அழிவுநிலைகளே நேரும் என்பதில் துளியும் ஐயமின்று.
உயிர்கள் அனைத்தினும் மேம்பட்டு விளங்கும் மாந்த இயக்கமும் அதன் பரும, நுண்ம நிலைகளுக்கு ஏற்ப, ஒழுங்குற இயங்குதல் வேண்டும் என்பதே இயற்கையின் உட்கோளாதல் வேண்டும். ஒழுங்கற்ற பரும இயக்கத்தால் உடல் சிதைவுறுதல்போல் ஒழுங்கற்ற உணர்வியக்கத்தால் உள்ளமும் சிதைவுறும். உள்ளச் சிதைவு மாந்தப் பேரழிவையே தோற்றுவிக்கும்.
உணர்வியக்கத்தின் தலைமைக்கூறு மொழி. மொழியின் படிநிலையுற்ற ஒழுங்கியக்கம் இலக்கணம். எனவே, இலக்கணச் சிதைவு மொழியைச் சிதைப்பதும், மொழிச் சிதைவு கருத்தைச் சிதைப்பதும், கருத்துச் சிதைவு உணர்வைச் சிதைப்பதும், உணர்வுச் சிதைவு உளத்தைச் சிதைப்பதும், உளச்சிதைவு உலகியலைச் சிதைப்பதும் ஒன்றினின்று ஒன்றெழும் தொடர் விளைவுகளாகும்.
மொழியின் மலர்ச்சியே பாட்டு. பாட்டுணர்வால்தான் மாந்தன் மீமிசை உயிருணர்வை எட்டுகின்றான். மற்ற உணர்வுகள் மாந்த உணர்வுகளிலேயே அவனைத் தேக்கி வைத்திருக்கையில், பாடல் உணர்வே புறவுணர்வுத் தளைகளைக் கட்டறுத்து, உலகியல் கூறுகளினின்றும் விடுவித்து, அவனை மீமிசை மாந்த நிலைக்கு உயர்த்துகிறது. பாட்டுணர்வு தாழ்ச்சியுறுதலால் அவன் உணர்வுயர்ச்சிக்குச் சறுக்கல் ஏற்படுகின்றது: உயிர்மைக்கு அயர்வு ஏற்படுகின்றது. இதனால் இயற்கைத் துய்ப்பு கெடுகிறது. உயிர்மை குன்றுகிறது; உலகியல் உணர்விருள் அவனைப் பற்றி