பக்கம்:கனிச்சாறு 1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  13


50.

தோளொடு தோள்நின் றாற்றத் துகள்வானில் மேவ வார்க்கும்
வாளொடு வாள்நின் றாற்ற வாங்குகை வீச் சொலிப்ப
ஆளொடு ஆள்நின் றாற்றும் அருந்தமிழ்க் கூட்ட மெங்கோ
தூளொடு தூளாய்ப் போன வகையாகித் துவண்டு போனாய்!


51.

நந்தமிழ்த் தாயைக் காக்க நாட்டினுள் மக்க ளெல்லாம்
வெந்தநெஞ் சோடுகண்ணில் வெம்மையோ டணுகி நின்று
வந்தவ ரோட்டி வாழ்வை வகை செய்தே ஆட்சி மாற்றி
அந்தமிழ் பேணித் துன்ப மகற்றுநா ளெந்த நாளோ?


52.

நானிலந் தமிழை யேற்று நந்தாத சீருண் டாக்கி
மாநில மக்கட் கெல்லாம் மணித்தமிழ்ப் பேசச் சொல்லி
ஈநில நூற்க ளெல்லாந் தனித்தமிழ் இயம்பல் தானே
நாநில மீதுகாணு நற்கனா தமிழ்த்தா யம்மா?


53.

பசிப்பிணி பஞ்சம் என்றே பாடுடை மக்கள் கூறப்
‘புசி’த்தினி யெஞ்சோ மென்றே ‘புவி’மிசைச் சிலரே வாழ
விசித்தழு குழவி தாங்கி வெம்பசி மடியிற் றாங்கி
விசித்திலா வேழைக் கெந்நாள் வாழ்வுசேர் நாளோ அம்மா!


54.

பாருக்கோ ரரசுசெய்து பணிமொழி யமைச்சுண் டாக்கி
நேருக்கோர் மொழியை வேண்டின் நந்தமிழ் அரசி லேற்றி
ஊருக்குந் தமிழ்ப்பேர் சூட்டி உழைப்பினால் சீர்மை செய்து
ஏருக்கித் தரையை ஈந்தே இன்னலஞ் சேர்ப்பா யம்மா!


55.

பிறங்கிய நன்னூ லாக்கீர் பீடுறு வினைகள் ஆற்றீர்
கறங்குசீ ரடிசேர் அன்புக் கன்னியர் போற்றீர்; தொல்சீ
ரிறங்கிய நாற்றாய்ப் பேணி ஏறுசீர் நாளுஞ் சேர்த்துத்
திறங்குவி நாட்டைக் காப்பீர் தீந்தமிழ்த் தாய்காப் பீரே!

(வேறு)


56.

புகவொடு புனைவிற் பொருளும், பொருள்தரு தொண்டும் புலனார்
மகவொடு மனையு மகலா மாண்பொடு பிறவும் மலியத்
தகவொடு வாழ்வுந் தகராத் தகைசேர் தமிழும் சூழ
அகமொடு புறமு மாநல் லறவாழ் வாழ்த்துக தாயே!

(வேறு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/40&oldid=1419418" இலிருந்து மீள்விக்கப்பட்டது