பக்கம்:கனிச்சாறு 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 கனிச்சாறு – முதல் தொகுதி



5  பாட்டும் மொழியும்!


பாட்டெனப் படுவது பண்ணும் கருத்தும்
கூட்டி மகிழ்தலும் கொடுந்துயர் நீக்கலும்
உள்ளத் தாழ்ந்த உள்ளுணர் வெழுந்து
வெள்ளத் தோசையில் விளைக்கும் சொற்குழு!
ஆற்றிய நிகழ்ச்சியை முற்றும் மறந்துளம்
சுற்றிய தொன்றின் பான்மையைச் சொற்களால்
அழகுறக் காட்டி அணைக்கும் மகிழ்வைப்
பழகுநற் கூட்டும் பான்மை யுடையது!
எண்ணமே மலர்ந்தோ ரிசைபட வருதலாற்
என்ன மொழியிலும் எழுந்துயிர் பெறுவது!


கிளர்த்தெழு ணர்வைக் கிளத்துதல் மொழியின்
வளத்தைப் பொறுத்தது? வைய மொழிகளுள்
படலி லாமொழி பயனில தெனலாம்!
தேடருஞ் சொற்கள் திகழ்திரு மொழியே
பீடுறு மொழியாம்! பாட்டெனும் இசைப்பெண்
ஆடுநல் அரங்கமம் மொழியே எனலாம்!
இசையினுக் கேற்ற மெல்லொலிச் சொற்கள்!
வசையினுக் கேற்றவை வல்லொலிச் சொற்கள்!


இன்னவை இரண்டும் இனியநம் தமிழில்
கன்னலில் இன்சுவை கலந்தது போலக்
கலந்துள தறிவோம்! காணும் மொழிகளுள்
இலவா மிவ்வகை! எடுத்துக் காட்டுவோம்!
கரடும் முருடும் கடிபொருட் சொற்கள்!
பறித்தலும் முறித்தலும் பாடுடை வன்செயல்!
‘பேசுதல்’ என்பது மெதுவாய்க் கடிதலும்!
ஏசுதல் என்பது வலிவாய் இரைதலாம்!
திட்டுதல் என்பது தீமொழி கூறலாம்!
முன்னிரு சொற்களில் மொய்க்கும் எளிமையும்
வாய்விட் லொலிக்கின் வல்லோர் உணர்வர்!
புல்லைப் ‘பறித்தனன்’ என்பதும், மென்மைப்
‘பூவைக் கொய்தனன்’ என்பதும் காண்மின்!
வேற்று மொழிகளில் வினைச்சொல் பெயர்ச்சொலை
ஏற்று வருவதை எங்கும் கண்டிலம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/43&oldid=1418384" இலிருந்து மீள்விக்கப்பட்டது