பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 17
‘யாய்’ எனக் கூறுதல் ‘என்தாய்’ எனப்படும்!
‘ஞாய்’ என மொழிதலோ ‘நும்தாய்’ என்றலை!
அவன் தாய் என்றலைத் தாயென மொழிகுவர்!
எவர் மொழி தமிழ்விட் டியம்புமிவ் வாறு!
ஏவலி னொரு சொல் லோ‘டல்’ விகுதி
தாவல் செய்யின் வினைச்சொல் தோன்றும்!
ஒவ்வொரு செயற்கும் ஒவ்வொரு புதுச்சொல்
பயிறல் என்பது பண்தமிழ்க் கண்ணிலை!
பாடு எனப் படுமோர் ஏவலோடு 'அல்' வரின்
‘பாடுதல்' எனுமோர் வினைவரும்! இதுபோல்
கூடுதல் தேடுதல் குனிதல் குரைத்தல்,
ஓடுதல் உண்ணல், உடுத்தல் உலவுதல்,
எனவரும்! இத்தகு முறைஆங் கிலத்தில்
உண்டென் றியம்பினும் உறுந்தொடர் வினைக்கும்
ஒன்றென நிற்கும், மயக்கொன் றுண்டு
இத்துணைச் சொற்சிறப் பேற்றநந் தமிழில்
இசைபொருட் கேற்ற வகைசில காண்போம்!
எத்துணைச் சிறப்பொடு, எழுந்தது இலக்கியம்!
மேனாட் டார்கள் மிகுதியும் கருத்தையே
வீணாய்ப் புகுத்தினர்! வேட்டல் கொடுத்திடும்
சொற்களின் அழகிலாச் சொற்றொடர் மனத்தில்
நிற்கு மென்பது நிலையிலாக் கொள்கை!
பெருங்கருத் தெனினும் பாடலோ டியன்ற
அருந்திறன் பெற்றகத் தமைந்திடும் விரைவில்!
இதனை எண்ணியே இலக்கணம் என்னும்
பொதுவரம் பதனைப் பாடலிற் புகுத்தி
எளிதினில் யாவரும் உள்ளத் திறுத்திட
தொல்காப் பியனெனுந் தொன்முது புலவனும்,
பவணந்தி என்றொரு நன்னூல் முனிவனும்,
மொழியினுக் கடித்தள வன்மைசெய் வார்போல்
அழியா இலக்கணம் அன்றே செய்தனர்
இலக்கணம் என்னும் ஈடிலாச் செல்வமும்
இலக்கிய வழக்கொடு இருப்பது தமிழ்போன்
றெம்மொழி தனிலும் இலை யென் றெண்ணி
இம்முறை யொன்றே ஈடிலாப் பெருவாய்!
-1955(?)