இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18 ☐ கனிச்சாறு – முதல் தொகுதி
6 முத்தமிழ் முப்பது!
1. பாட்டுப் பத்து
1.மூத்த வுணர்வின் முதிர்வசையால் உள்ளணுக்கள்
- யாத்த வரியிசையே பாட்டு.
2.வல்லார் நினைத்த நினைவலைகள் வந்துறுத்தச்
- சொல்லால் எதிரொலித்தல் பாட்டு.
3.காற்றின் நுணித்தாய்க் கருத்தலைகள் உள்ளூறி
- ஊற்றுப் பெருக்குவதே பாட்டு!
4.கிடந்த வொழுங்கின் உணர்வலைகள் நெஞ்சில்
- நடந்த வொழுங்கிசையே பாட்டு.
5.ஊன்றும் இறையொளிமூண் டுள்ளக் கனலெழுப்பத்
- தோன்றும் உணர்வொலியே பாட்டு.
6.மூண்ட நெடுநினைவால் முற்றும் உளக்கனியைக்
- கீண்ட வொலியூற்றே பாட்டு.
7.அண்ட வெளியொலியை ஆகத் தணுப்புகுத்தி
- விண்ட வுணர்வொழுங்கே பாட்டு.
8.தோற்றம் நிலைப்பொடுக்கம் என்னுந் தொலையுணர்வின்
- ஏற்றம் விளக்கொலியே பாட்டு.
9.அணுவை அணுத்துடிப்பை ஆன்றெ வொளியின்
- அணுவை ஒலியாக்கல் பாட்டு.
10.என்றும் இருப்ப தினியொன் றிருப்பதுபோல்
- என்றும் இருப்பதுவே பாட்டு.