உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  21

7  தமிழ்த்தாய்ப் பத்து!


என்றுன் னகரத் திருவரி கூறி
எழுதினரோ?
என்றுன் சிலம்பக் கழலடி ஆணை
இயற்றியதோ?
மன்றுண் ணமர்ந்து புலவர் துடிநா
விளையமிழ்தத்
தன்றன் றிளமை அணையுந் தமிழே!
அணிமொழியே!

மொழியா திருந்தார் முடவாய்ப் புகுந்தொலி
முன் முழக்கி.
வழியா யிருந்து வடுவறு வாழ்க்கை
யமைத்தவளே!
அழியா திளமை அருகாத் திருவளம்
ஆர்ந்துயர்ந்தோர்
விழியா திரவும் பகலும் புரக்கும்
விழிமணியே!

மணிமுடி யேறிக் கழகப் புலவர்
மடிபுரண்டே
அணிமுடி சூட்டி அரசேய்ந் திருக்க
அடிதழீஇத்
திணிதெலுங் கங்கன் னடமலை யாளந்
துளுவமெனப்
பணிமொழி பத்தொரு மூன்றும் பரவப்
பரந்தவளே!

பரந்துயர் நற்சீர் பழுனிய நின்னைப்
பரவியெழிற்
கரந்தவர் பல்லோர் கழலடி தாங்கிக்
கழியிளமை
இரந்தவர் பல்லோர்! இடர்ந்தவர் பல்லோர்
எனினுமுனைப்
புரந்தவர் உள்ளப் பொழில்மணை யேறிய
பூவையளே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/48&oldid=1419313" இலிருந்து மீள்விக்கப்பட்டது