உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  31


14  உயிர் வாங்குவேன்!

தாய்க்குறின் கேடே தழற்படு முளமே !
சேய்க்குறின் தீங்கே விழிநீர்ப் படுமே?
கேட்டீ எலுவ ! நாட்டுத் துயர்தரின்
ஈட்டி யாயினும் எந்தோள் அடுமே !
பல்லா யிரமாண் டுயர்வழி பயின்ற
செல்லா நல்லிசை வெல்லத் தமிழ்மொழிக்
கொருவன் இழிசெயின் நெறியிகந்
தருமுயிர் வாங்குவ னவ்விடத் தானே !

-1960


15  ‘கவிதை’ மேற் ‘கவிதை’

கவிதை ஒளிர்மின்னல் என்போம்! - உடன்
கிளர்த்துக் கிளைத்து மிளிர்ந்திட லால்! - நல்ல
கவிதை வீழ் அருவி என்போம்! - உளங்
கல்வி உடல் எங்கும் குளிர்செய்தலால்! - இன்பக்
கவிதை ஒரு குழந்தை என்போம்; - நாம்
கூவச் சுணங்கிக் கூவா தருகலால்! - ஒளிக்
கவிதை புது நங்கை என்போம்; - நாம்
கூடென ஊடி, உடன் கூடலால்!

கவிதை யிளந் தென்றல் என்போம்; - செவி
குளிர்ந்திடுஞ் சொல்லால் உளந் தோயலால்! - நல்ல
கவிதை பெரும் புயலா மென்போம்; - தீமை
கொன்றுள மெங்கும் மாற்றஞ் செய்தலால்! - இன்பக்
கவிதை மூண்டெரி தீ என்போம்; - உளங்
காய்த்துரு மாற்றி உயிர் கவ்வலால் - ஒளிக்
கவிதை நறுந் தாய்மை என்போம்; - தனைக்
கற்றார் தமைப்பேணிப் புகழ் காத்தலால்!

-1960 (?)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/58&oldid=1512688" இலிருந்து மீள்விக்கப்பட்டது