பக்கம்:கனிச்சாறு 1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

ஆட்கொள்ளும் நிலையில் அஃது ஒரு மண்வெட்டியைப்போல் பயன்படுதல் வேண்டும். மண்வெட்டி பள்ளம் மேடுகள் நிறைந்த நிலத்திற்கே மிகுதியும் பயன்படுவதாகும். சமமான தரையில் அதன் பயன்பாடு மிகவும் குறைவே. வெறும் சுவைக்காக மட்டுமே வெளிப்படும் பாடல்கள் மாந்த உள்ளுணர்வுகளை வளர்த்து வாழ்விக்காமல் அவற்றை மழுங்கடித்துவிடும்.

பாட்டுணர்வு இயற்கையேயாயினும், அதன் புறக்கூறுகள் உலகியல் சான்றனவே. அப் புறக்கூறுகள் அசை படிந்த சொற்களாலும், சொற்களமைந்த சீர்களாலும், சீர்கள் இணைந்தியங்கும் யாப்பாலும், யாப்புடன் கூடிய அணியாலும், அணிபெற்றியங்கும் கருத்தாலும் விளங்கித் தோன்றுனவாகும். அவையே பாடலுக்குரிய தகுதிகளும் ஆகும். அவை பதினான்கு இன்றியமையாக் கூறுகளைக் கொண்டவை. அவை இவை:

அ. சொற்கள்
1. கருத்தாழம் நிரம்பிய தேர்ந்த சொற்கள்.
2. சுற்றி வளைக்காத சொல்லாட்சி.
3. வளங்கொழுவிய பொருத்தமான சொற்கள்.
4. குறைவான இடைச் சொற்கள்.
ஆ. சீர் அமைப்பு:
1. ஒலிநயத்தால் இணைகின்ற சீர் அமைப்பு.
2. கருத்தின் உணர்வுக்கேற்ற சீர் நீளம்.
3. வகையுளி அல்லது சொற்பிரிப்பால் பாட்டின் ஓட்டத்தையும் அழகையும் குறைக்காமல், முழுச் சொல்லால் அல்லது சொற்களால் அமைந்த சீர்கள்.
இ. யாப்பு
1. பிழையற்ற யாப்பு.
2. கூறப்போகும் கருத்தின் உணர்வை மழுங்கடிக்காத யாப்பு வகை.
3. உணர்வுயர்ச்சிக்கும் கருத்தகலத்திற்கும் ஏற்பத் தெரிந்தெடுக்கப் பெற்ற யாப்பு.
ஈ. அணிகள்
1. எளிதே விளங்கிப் பாடற் கருத்துடன் உடனே பொருந்துமாறு இருக்கும் உவமைகளும் உருவகங்களும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/6&oldid=1512919" இலிருந்து மீள்விக்கப்பட்டது