இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36 ☐ கனிச்சாறு – முதல் தொகுதி
21 நரிச் செயல்!
மொழி நலமும் இனநலமும் காவாதார்
தமிழ் காப்போம் எனமு ழங்கல்
குழிமுயலைக் காப்பமெனக் கோளரிபால்
நரிகொண்டு சேர்த்தல்’ ஒக்கும்;
பழி சேர்க்கும் செந்தமிழ்க்கு; தமிழகத்தைப்
பகைவரின்கைக் கொண்டு சேர்க்கும்.
விழி சோர்தல் இல்லாது தமிழரெல்லாம்
வியன்றமிழைக் காத்தல் செய்வீர்!
-1963
22 மொழிப்போர் புரி!
மொழிப்போர் புரி! செழிப்பாந் தமிழ்
மொழிப்பால் குடிப்பாய்!-இனிப்
பழிப்பார் உனை; அழிப்பார் பினை;
விழிப்பாய் தமிழா!
அறப்போர் புரி! சிறப்பாந் தமிழ்
மறப்போர் புரிவாய்!-உயிர்
துறப்பார்க் கினிப் பிறப்பார் வயின்
இறப்பே தடடா!
சிறுத்தாய் என ஒறுத்தார்; துயர்
பொறுத்தாய் பலநாள்!- உயர்(வு)
அறுத்தார்; குரல் மறுத்தார்; நிலை
நிறுத்தாய் நெடுந்தோள்!
-1963