௬
கனிச்சாறு - முதல் தொகுதி
2. பாட்டின் பெருமையைக் குறைக்கும் பிற ஆரவார அணிகள் பெரிதும் தவிர்க்கப் பெறுதல்.
உ. கருத்து
1. மயக்கம் தராது உடனே புலப்படும் தெளிவு நிறைந்த கருத்து.
2. பொது மனத்திற்குப் புலப்படாத உயர்ந்த கருத்து.
இனி, முன்னைக் காலத்து, இயற்கை உணர்வின் ஒலியொழுங்குக் கொத்த மரபு தழுவிய பாடல்கள், தாய்மையுணர்வு நிரம்பிய ஓரிளம் பெண் பெற்றெடுக்கும், நல்ல அழகிய அறிவறிந்த நிறைமாதக் குழந்தைகள் போன்றவை. சோம்பலாலும் அறிவுக் குறுக்கத்தாலும் மன இழிவாலும் பிதுக்கப்பெறும் இக்காலத்து மரபு நழுவிய பாடல்கள், தாய்மையுணர்வு நிரம்பாத பெண்ணுரு சான்ற ஒருத்தி, அரைகுறை முதிர்ச்சியோடு பெற்றெடுக்கும், உறுப்புகள் குறைவுற்று அழகும் அறிவும் குறைந்த, குறைமாதக் குழந்தைகள் போன்றவை. நன்கு வளர்ச்சியுறாத உறுப்பு நிலைகளும், உணர்வு நிலைகளும், அக்குழந்தைகளைக் கவர்ச்சியற்றனவாகவும் நீடிய காலத் தங்குதலற்றனவாகவும் ஆக்கிவிடுகின்றன.
ஒழுங்கற்ற ஓசை இசையாகாததுபோல், ஒழுங்கான கட்டுக் கோப்பற்ற கருத்து வெளிப்பாடும் பாடலாகாது.
பாடல் உள்ளத்தின் மலர்; உணர்வின் மணம்; உயிரின் ஒலியொழுங்கு.
பாடல் மலரிலிருந்தே உரைநடையென்னும் காய் தோன்றிக் கதையாகக் கனிகிறது.
பாடல் உணர்வு சிதைவுறுமானால் உரைநடையாக அது தத்துகிறது. உரைநடையில் பாடல் உண்டு. பாடலில் உரைநடை இல்லை. பாடல் உரைநடையாவது, மலர் தன் மென்மையையும் மணத்தையும் இழந்து பருமையும் வெறுமையும் உறுவது போன்றதே. அத்தகைய பாடற்போலிகள் தேங்காய் மட்டையின் ஊறலின்று அடித்தெடுக்கும் நார் போன்றவை.
இனி, உண்மையான பாடலை வெளிப்படுத்துபவனே உயர்ந்த பாவலன். பாவலன் பிறக்கிறான்; பாடல் தோன்றுகிறது. பாவலன் படைப்பாளன். அவன் உண்டாக்கித் தரும் உணர்வுருவாய கற்பனை மாந்தர்களையே இயற்கை பருவுருவாக உலகுக்குப் படைத்துத் தருகிறது. எனவே உலகின் இயற்கைப் படைப்புக்கே அவன் உணர்வுக் கருவைத் தருபவனாகிறான்.