44 ☐ கனிச்சாறு – முதல் தொகுதி
காலை முதலாக் கவின்மாலைப் போழ்துவரை
வேலை புரிந்த களைப்பால் விடியுமட்டும்
சேலென் விழிமூடித் தூங்குதியோ! செந்தமிழென்
பாலிற் கொடுநஞ்சைப் பாய்ச்சினர்காண்; கூர்மழுங்கா
வேலில் வடித்த விழியுடையாய்! வெம்பகைவர்
காலில் தலைதெறிக்க ஓடக் கனன்றிலையேல்!
ஆலைப் படுபஞ்சாய் ஆக்கப் படுவோங்காண்!
வாலைக் குமரி! விரையேலோ ரெம்பாவாய்!
25
மண்டும் இருள்போய் மனைச்சேவல் சீர்த்தெழுந்து
கொண்டை குலுங்கிடவே கொக்கரக்கோ கோவென்று
தொண்டை கிழியத் துயிலெழுப்பும்! தோட்டத்தே!
மண்டுங் கறவை மடிநிரம்பிக் கூவிநிற்கும்;
தொண்டு புரியும் பணியாளர் பேச்செழும்பும்!
பண்டைப் பெருமைநலம் பண்ண மறந்தவளாய்,
வண்டு விழிமுடி வார்குழலும் தூங்குதியே!
அண்டை நிலத்தார் அடிமைகொள வந்தனர்காண்!
உண்டு பணிகள்! உணர்கேலோ ரெம்பாவாய்!
26
காக்கை கரையும்! கருவானம் வெள்வாங்கும்!
மேற்கில் மதிகரையும்! கீழ்க்கதிரும் மேலெழும்பும்!
ஈர்க்குமா றோசை இரையும் தெருவெல்லாம்!
யாக்கை வளர்ப்பார் தவிரஎவர் இப்பொழுதில்
சேக்கை புரள்வார்? சிறுதுயிலுங் கொள்ளுதியே!
தீக்கை வடவர் திரிபுரையால் தீந்தமிழின்
ஆக்கந் தடுப்பார்; அவர்மொழிக்கே வித்திடுவார்!
போக்கைத் தடுக்கப் புறப்படுவாய் பொற்சிலம்பாய்!
தூக்கங் களைந்து துணிவேலோ ரெம்பாவாய்!
27
மாணிக்கச் செம்பரிதி வார்கடலை விட்டெழும்பும்;
தோணி வலைவீசித் தோய்துறைக்கு மீண்டுவரும்;
காணி உழுதார் கதிரெழுமுன் வேளாளர்!
நாணும் மடவார் இருளுடையில் நீர்குடைவார்!
கேணிக் கரையில் வளைக்குடங்கள் கிண்கிணிக்கும்!
பூணுதியே பேயுறக்கம்! பூவாய்! பொலிதமிழைப்
பேண வெழுந்தால் பிழைப்பாரார்? பெண்புலியே!
தூணுந் துரும்பாம்! துணிவேலோ ரெம்பாவாய்!
28