பக்கம்:கனிச்சாறு 1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 கனிச்சாறு – முதல் தொகுதி

சொல்விற் றுண்ணும் சோம்பலா சிரியர்! 125
அவர்வயின் கற்கும் அரைகுறைப் படிப்பும்!
உவர்நிலத் தூற்றாய் என்றும் உவர்ப்பதே!
இத்தகைப் படிப்பிற் கிடிபிடி என்னும்
குத்தகை மாணவக் கொள்கையில் கூட்டமே
பல்கலைக் கழகத்துப் பார்க்கும் ஓவியம் 130
தமிழனை வடவன் தாழ்த்தினான் அல்லன்!
தமிழனைத் தாழ்த்துவோன் தமிழனே!
இமையும் மூடாது எழுக இளைஞரே!

-1965


27  முதலமைச்சே முதற்பகை!

தமிழகத்தின் முதலமைச்சே தமிழ்மொழியின்
முதற்பகையாய் இருக்கும் கீழ்மை,
தமிழகத்துள் அல்லாமல் பிறநாட்டில்
எங்கேனும் நடப்ப துண்டோ?
தமிழ்மொழியைக் காவாதான் தமிழ்த்தலைமை
தாங்குவதோ? தமிழ கத்தீர்,
தமிழகத்தின் வாழ்வெல்லாம் அன்னவரின்
வீழ்வன்றோ? எண்ணு வீரே!

-1965


28  மற்போர் தொடங்குக!

கற்போரே செந்தமிழைக் கலக்குகின்றார்;
காசுபணம் பதவிநலம் தமக்கே மானம்
விற்போராய் வாழுகின்றார்; விளைவெல்லாம்
வீழ்த்துகின்றார்; இனிமேலும் அவர்பால் சென்றே
சொற்போரால் மல்லாடிச் சோர்வுறுதல்
முறையன்று; தமிழ்நினைவு சூம்பும் முன்னே
மற்போரைத் தொடங்கிடுவாய்; எழுதமிழா!
மறுநொடியில் விளைவுபல மலிதல் காண்பாய்!

-1966
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/77&oldid=1512692" இலிருந்து மீள்விக்கப்பட்டது