பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 51
29 தமிழ் நெஞ்சம்!
வானார்ந்த பள்ளிகளில் கல்லூரி தன்னில்
வளர்கல்வி பயில்கின்ற இளைஞர்எல் லார்க்கும்
தேனார்ந்த செந்தமிழ்மேற் பற்றில்லை; முன்னோர்
தேக்கி வைத்த நூற்களிலே ஈடுபா டில்லை;
கூனார்ந்த மென்முதுகும், பொலிவிழந்த தோளும்
குழிவிழுந்த விழிகளிலே ஒளியிழந்த நோக்கும்,
ஊனார்ந்த பருவுடலும் வாய்த்திருக்கக் கண்டேன்;
உளங்கவன்றேன்; அவர்நெஞ்சில் தமிழில்லை யன்றோ?
படிக்கின்ற மங்கையர்க்கும் முகத்திலொளி இல்லை;
பழகுகின்ற செயல்களிலும் செந்தமிழ்ப்பண் பில்லை;
துடிக்கின்ற இடையில்லை; பருத்துள்ள தூண்கள்!
தோள்களிலும் அழகில்லை; வலிவில்லை; சூம்பல்!
நடிக்கின்ற பொய்யன்பு; நாகரிகப் போலி!
நலிந்தவுடல்; இல்லறத்தில் நாட்டமிலாப் போக்கு!
கடிக்கின்ற உரையாடல் வாய்த்திருக்க கண்டேன்;
கவல்கின்றேன்; அவர் நெஞ்சில் தமிழில்லை யன்றோ?
கற்கின்ற காளையர்க்கும் கன்னியர்க்கும் இக்கால்
கல்வியிலே பிடிப்பில்லை; அறிவிலில்லை ஆர்வம்!
சொற்குன்றும் மொழிகளிலே சோர்வுபடப் பேசிச்
சோற்றுக்கு வாழ்வமைப்பார்; உள்ளநலங் காணார்!
விற்கின்றார் மொழிமானம்; தன்மானம்! விற்றே
விழலுக்கு நீர்பாய்ச்சி வீழ்ந்திறந்து போவார்!
பொற்குன்றம் பொடிமணலாச் சிதறுண்டு போகும்
பொருட்டென்ன? அவர்நெஞ்சில் தமிழில்லை அன்றோ?
வல்லடிமை இனித்ததென்ன? மெய்புளித்த தென்ன?
வாங்கியுண்ணும் கைச்சோறிங் குயர்ந்ததென்ன? வாழ்வில்
மல்லடிமைப் பட்டதென்ன? அறம்மறந்த தென்ன?
மானமெனும் உயர் உணர்வும் அற்றதென்ன? உள்ளம்
புல்லடிக்கும் கீழடியாய்த் தாழ்ந்ததென்ன? பெண்டிர்
பொற்பிழந்து போனதென்ன? உயிர்ப்பழிந்த தென்ன?
சொல்லடிமைப் பட்டதன்றோ? மொழியடிமைப் பட்ட
சோர்வன்றோ? அவர்நெஞ்சில் தமிழில்லை அன்றோ?