பாவலரேறு பெருஞ்சித்திரனார்
எ
உயர்ந்த உண்மைப் பாவலனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பத்து. அவை, நுண்ணோக்கு, இயற்கையீடுபாடு, சொல்வன்மை, பாத்திறன், யாப்பறிவு, மொழியறிவு, கற்பனையாற்றல், மனவியல், நடுவுநிலைமை, துணிவு என்பனவாகும். இவை ஒன்றின் ஒன்று சிறந்து விளங்கிப் பாவலன் ஆற்றலைப் படிப்படியாக மிகுவிக்கின்றன. இத்தகுதிகளின் பொருத்தத்திற்கேற்பவே ஒவ்வொருவனின் பாடலும் ஒளிர்ந்து சுடரும்; காலத்தை வெல்லும்; மக்கள் கருத்தினை ஆட்கொள்ளும்; அறிஞர் மதிப்பினைப் பெறும்.
கனிச்சாறு என்னும் இப்பாடல் தொகுதி பல நூறு கற்பனைத் தோற்றங்களை உங்கட்குக் காட்டுவதாகும். பல வாழ்வியல் கூறுகள் இதில் சொல்லப் பெறுகின்றன. அறிவுநிலை விளக்கங்கள், உரிமை உணர்வுகள், மாந்தநிலை உயிரெழுச்சிக் கூறுகள், உள்ளுணர்வெழுப்பும் மெய்யறிவு நிலைகள், மொழியியல், இனவியல், நாட்டியல் புரட்சிக்கு வித்தூன்றும் அடிப்படை வரலாறுகள் முதலியன இப்பிழிவில் கலந்திருப்பதை நீங்கள் சுவைத்து உணரலாம்.
கனியைப் பிழிந்திட்ட சாறு - எம்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!
என்றும்,
கனிச்சாறு போல் பல நூலெல்லாம் கண்டு
காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு!
என்றும், பாவேந்தர் பாரதிதாசன் தமிழையும் தமிழ்ப் பனுவலின் இனிமையையும் உணர்த்தக் கனிச்சாற்றை உவமை பேசுவார்.
எனவே தமிழும் தமிழுணர்வும் செறிந்து விளங்கும் இப்பாடல் தொகுதிக்குக் கனிச்சாறு என்று பெயர் தரப்பெற்றது. மிக அரும்பாடுபட்டு இத்தொகுதித் தொடர்கள் வெளியிடப்பெறுகின்றன.
தமிழினம் தன் நிலைப்பாட்டு மேன்மைக்கு இத்தொகுதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாக.
சென்னை - 5
அன்பன்
பெருஞ்சித்திரன்
14-4-1979