உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 கனிச்சாறு – முதல் தொகுதி

வழிவழியாய்க் கற்றமொழி ஆகையினால் பார்ப்பனர்க்கே
ஆங்கிலத்தில் வல்லாண்மை மிக்க வுண்டு.
மொழிவழியாய் அறிவியலைக் கற்பதெனில் தாய்மொழிக்கே
முதற்சலுகை தரல்வேண்டும் என்ற கொள்கை
வழிவழியே செங்குருதி கொப்புளிக்க வைத்ததெனில்
வீணுரைசெய் தமிழர்க்கிது விளங்க வேண்டும்!
இழிவழிய எந்தமிழர் தம் வாழ்வை முன்னேற்றற்
கிதுதவிர வழியுண்டோ? இயம்பு வீரே!

-1970


35  பைந்தமிழில் படிப்பதுதானே முறை!


பழந்தமிழ் நாட்டில்
பைந்தமிழ் மொழியில்
படிப்பதுதானே முறை?
இழந்தநம் உரிமை
எய்திடத் தடுக்கும்
இழிஞரின் செவிபட, அறை!

கனித்தமிழ் நிலத்தில்
கண்ணெனுந் தமிழில்
கற்பது தானே சரி!
தனித்தமிழ் மொழியைத்
தாழ்த்திய பகையைத்
தணலிட் டே, உடன் எரி,

தமிழ்வழங் கிடத்தில்
தாய்மொழி வழியாய்த்
தமிழர் படிப்பதா பிழை?
அமிழ்ந்தவர் எழுந்தால்
அயலவர்க் கென்ன?
அயர்வதா? நீ,முனைந் துழை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/85&oldid=1513004" இலிருந்து மீள்விக்கப்பட்டது