இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62 ☐ கனிச்சாறு – முதல் தொகுதி
38 வெற்றிக்கென் வேண்டுவதே ?
நெஞ்சில் தமிழ் நினைவு;
நீங்காத மெய்யுணர்வு;
செஞ்சொல் குமிழியிடும்
சிதையாத பாட்டுயிர்ப்பு;
துஞ்சா இரு விழிகள்;
தொய்ந்து விழா நற்றோள்கள்;
அஞ்சுதல் இன்றி
அயர்வின்றி நின்றவுரம்;
எஞ்சுகின்ற காலமெலாம்
ஏற்ற நறுந்தொண்டு;
நஞ்சு மனங் கொண்டார்
நடுக்கமுறுஞ் செந்துணிவு;
கொஞ்சமிலை, நல்லிளைஞர்
கூட்டமோ கோடி பெறும்!
விஞ்சுகின்ற செந்தமிழே,
வெற்றிக்கென் வேண்டுவதே?
-1972