உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனிச்சாறு முதல் தொகுதி


முதல் பதிப்பு - பதிப்புரை


உலக வரலாற்றிலேயே தலைசிறந்தது மாந்த வரலாறாகும். அதனுள்ளும், நம் முதுபழங் குமரித் தமிழிய வரலாறோ, மூல முதன்மையும், உயர் மாந்தத் தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும்.

அத்தென்குமரித் தலைக்கழக(சங்க)க் காலத்து முத்தமிழ் மீமிசை மாந்த வாழ்வியலின் ஏந்திய பண்பு நலன்கள் யாவும், அடுத்து வந்த இடைக்கழகக் காலந்தொட்டே, (பிற்காலக் கீழை) வேத ஆரியத்தின் நுழைவால் தாக்குண்டு சீர்குலையத் தொடங்கின. அதுமுதலே, ஆரிய எதிர்ப்பியக்கங்களும், தொடர்ந்து, பரவல் சிதறலாகத் தமிழகத்தில் தோன்றி வரவே செய்தன. ஆனால், அவை எவற்றுக்கும் ஆரியத்தை அடிதுமித்துச் சாய்த்துத் தமிழ் மீட்பினை நிலைநாட்டித் தரும் மொய்ம்புரம் வாய்க்கவில்லை.

இறுதியாக, சென்ற நூற்றாண்டில், மேலைநாட்டு நல்லறிஞரால் விழிப்புறுத்தப் பெற்றும், மறைமலையடிகளாரின் தனித்தமிழ்த் தொண்டினாலும், பெரியாரின் இனமானத் தொண்டினாலும் இந் நூற்றாண்டில் புத்துரமூட்டப் பெற்றும், பல மறுமலர்ச்சி இயக்கங்கள் தமிழகத்தில் தோன்றலாயின. அவற்றின் ஒட்டுமொத்த முயற்சிகளின் மெய்வருத்தக் கூலியாக, இன்று மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் மொழிமுதற் புலத்தில், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் உரன்வல அறிவாண்மைப் படை கொண்டு முனைந்துழுது 'தென்மொழி' என்னும் இதழ்வாயிலாக, தேடரிய தெளிவியக்கம் ஒன்று புரட்சிக்கால் ஊன்றி, ஆள்வினையும் ஏற்றுள்ளது.

அத் 'தென்மொழி இயக்க'த்தின், வினை வேளாண்மைக்கென மொழி - இன - நாடு தழுவிய பல்வேறு துறைகளிலும், பாவலரேறு அவர்கள், முப்பது ஆண்டுகட்கும் மேலாக, பன்னூற்றுக் கணக்கில் பாடிக் குவித்துள்ள அரும்பாடற் கனிகளையே இங்ஙனம் தொகுத்து, 'கனிச்சாறு' ஆகப் படைத்துள்ளோம். அவ்வமிழ்தச் சாற்றினை ஆரப் பருகும் எவரும், தமிழியக் குடிசெயலுக்கு வேண்டிய 'வீறெய்தி மாண்ட' வினைத் திட்பம் பெற்று, தொண்டாற்ற முன்வர வேண்டுதலே எமது பெருநோக்கம் ஆகும்.

இப்பாடற் களஞ்சிய வெளியீட்டுத் திட்டம், கோவை மாவட்டத் தமிழன்பர்களின் அருமுயற்சியால் இயல்வதாகி, தி.பி. 2006இல் அறிவிக்கப் பெற்று, தி.பி. 2008 முதல் செயலாக்கங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/9&oldid=1539093" இலிருந்து மீள்விக்கப்பட்டது