பக்கம்:கனிச்சாறு 1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 கனிச்சாறு – முதல் தொகுதி



45  மானத்தை இழப்பேனோ ?


('மார்கழி மாதம் திருவாதிரை நாள்' -என்னும் மெட்டு)

 ஐம்பதி னாயிரம் ஆண்டுமுன் பிறந்த
அருந்தமிழ் வளர்க்காமல்
மொய்ம்பிலதான வடமொழி பேசி-என்
வாழ்வைக் குலைப்பேனோ?

மெய்யின் முற்பிறந்த மேந்தமிழ்ப் பாடி
மேம்பட்டு வாழாமல்
பொய்யின் பிற்பிறந்த வடமொழி பேசி-என்
பூண்டை அறுப்பேனோ!

செந்தமிழ்ப் பாடி உயிர்நலந் தேடி-என்
சித்தத்தை உயர்த்தாமல்
வந்தவர் மொழியாம் வடமொழி பேசி-என்
வாழ்வைச் சிதைப்பேனோ?

வள்ளுவன் குறளை, தொகையினைப் பாட்டை
வாய்மகிழ்ந் துரைக்காமல்
எள்ளுறும் மனுவை வேதத்தைப் பாடி-என்
இனத்தைப் புதைப்பேனோ?

சிலம்புமே கலையினைச் சிந்தா மணியினைச்
சீருறப் பாடாமல்
புலம்புபா ரதத்தினை இராமா யணத்தினைப்
போற்றிநான் அழிவேனோ?

வடவரின் மொழியை இந்தியென் பேயை
வழிவழித் தவிர்க்காமல்,
முடவனைப் போலொரு குருடனைப் போல்மனம்
முரண்படக் கிடப்பேனோ?

அற்றைநாள் பிறந்த அருந்தமிழ்த் தாயை
அரியணை யேற்றாமல்
மற்றையர் ஆட்சி மதித்துளம் வெம்பி
மானத்தை இழப்பேனோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/97&oldid=1513008" இலிருந்து மீள்விக்கப்பட்டது