பக்கம்:கனிச்சாறு 2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  65


41  ஒரு துளிக் கண்ணீர்!

இன்று வந்த இருபது மடல்களுள்
ஒன்றே என்றன் உளத்தைக் கவர்ந்தது.
மடலை விடுத்தவர் என்னை மதிப்பவர்!

உடலும் உயிருமாய் நானும் தமிழும்
இருப்பதை உணர்ந்தவர்; என்னை அடிக்கடி
விருப்புடன் வந்து பார்ப்பவர்; விளங்கிலாக்
கருத்துகள் பற்பல ஆய்பவர்! கனிவினால்
என்றன் நலம்பல எண்ணிச் செய்பவர்.
ஒன்றே தேர்ந்ததும், தேர்ந்த ஒன்றினைத்
துணிவும் தூய்மையும் துணையும் கொண்டு 10
பழந்தமிழ்த் தாயும் தமிழரும் நாடும்
இழந்த பெரும்புகழ் எய்திட உழைப்பதும்
என்றன் வாழ்வென மடலை எழுதிய
அன்பர் அறிவார்;

அவரும் பாக்களால்
அன்னைத் தமிழ்க்கே அலங்கல் சார்த்தித்
தன்னைத் தமிழ்க்கே தந்து வாழ்பவர்.
போலிச் செய்கையால் தமிழ்விலை போக்கும்
கூலித் தமிழரின் குறைமதிக் கழல்பவர்;
வேலி யிலாத்தமிழ் விளைபயிர் மேயும்
காலித் தமிழரின் கறையுளம் கடிபவர்; 20
உரைவளம் இன்றியும் இசையுயர் வின்றியும்
புரையுளம் மிகுத்துப் பண்பைப் புதைக்கும்
திரைப்படக் கதையையும் பாட்டையும் தீய்க்க
விரைவில் ஒருவழி வேண்டும் என்பவர்;
ஆளுங் கட்சியின் அறமிலாப் போக்கினால்
மாளும் மக்களைக் கண்டுளம் நொந்தவர்;
துவளும் மக்களின் துயர்மேற் கட்டிய
பவள மாளிகை எனும்பல கட்சிகள்
மேடையில் முழக்கிடும் ஆயிரம் பொய்யையும்
கூடையில் மூடும் கொள்கைச் சருகையும் 30
தேர்தல் நாடகக் காட்சித் திரிபையும்
கூர்ந்த நோக்கொடு எண்ணிக் குமைபவர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/101&oldid=1424697" இலிருந்து மீள்விக்கப்பட்டது