பக்கம்:கனிச்சாறு 2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


அப்படிப் பட்டவர் அனுப்பிய மடலில்தான்
இப்படி ஒருகருத் தெழுதி யிருந்தது!

“தமிழகம் தனியாய்ப் பிரிதலே தக்கதென்
றெழுதினீர் ஐயா, இதுதான் முடியுமோ?
இந்திய நாடென இயம்பலும் தகாதெனப்
'பாரதம்' என்றே பறைசாற்றுகிறார்;
இந்தியே ஆள் தற் கேற்ற தென்று
செந்தமிழ் வழக்கைச் சீரழிக் கின்றார்; 40

தமிழர் யாவரும் தன்மதிப் பின்றித்
தமிழையும் மறந்து பண்பையும் தள்ளி
உருவால் ஆங்கிலர் போலும், உளத்தினால்
திருவிலா வடவர் போலும் திரிகிறார்!
தமிழ்மொழி அறிவியல் கல்வியைத் தருமோ?
தமிழ்மொழி பெரும்பொருள் ஈட்டித் தருமோ?
தனித்தமிழ் தனித்தமிழ் எனமொழிந் தே,வாய்
இனித்திடல் அல்லால் வாழ்க்கை இனிக்குமோ?
ஐந்தி லக்கம் உறுப்பினர் கொண்ட
தி.மு. கழகமும் திரவிடக் கொள்கையை 50
நீக்கிய தென்றால் நீங்கள் நோற்கும்
நோக்கம் இலாத தனித்தமிழ் நோன்பால்
தமிழகம் பிரிதல் இயல்வதோ சாற்றுமின்?
அமைவிலாக் கொள்கைக்கு ஐய,நும் வாழ்வையும்
உள்ளம் கவன்ற தமிழர் ஒருசிலர்
கள்ளமில் லாத கடிய உழைப்பையும்
விழற்குப் பாய்ச்சிய வெள்ளம் போலும்
அழற்குப் போர்த்திய ஆடை போலும்
நிழற்குப் புனைந்த அணிகள் போலும்
சுழற்கு நிறுத்திய சுருட்பாய் போலும் 60
வறிதே மாய்த்திட வேண்டிலேன்; ஐய!
குறிதேர் வாழ்க்கை கொண்டுயிர் உய்க”

-என்று அம் மடலில் எழுதி யிருந்தது.
நண்பர் என்னை நன்றாய் அறிந்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/102&oldid=1424698" இலிருந்து மீள்விக்கப்பட்டது