பக்கம்:கனிச்சாறு 2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  69


அகப்புலம் இருண்டும் ஆவி கழன்றும்
புகப்புலம் அறியாப் புல்லுடல் மாக்கள் 130
அறமல் வழிகளில் பொருளை ஆக்கித்
திறமில் வாழ்க்கைத் தெளிவற் றிழிந்தார்!

இன்ன நிலையில் வளர்ந்தன எவையெனின்
மின்னாற் றலினால் மிளிர்ந்திடும் பொறிகள்!
கட்டிட மலைகள்! கயமைச் செயல்கள்!
பட்டினும் மயிரினும் பகட்டிலும் ஆடைகள்!
கொலைசெய் கருவிகள்! கொடுமை உளங்கள்!
கலைவினைக் கூடம்! கயமை மாந்தர்கள்!
வண்டிகள்; ஊர்திகள்; வளமிலா உடல்கள்!
பெண்டிர் மீசைகள்! பிள்ளைப் பேறுகள்! 140
மேனி மினுக்குகள்! கூனல் முதுகுகள்!
தீனிப் பண்டங்கள்! தெருத்தொறும் குப்பைகள்!
உடல்தெரி உடைகள்! ஊத்தைச் சதைகள்!
குடல்வலி மருந்துகள்! கொண்டைப் புனைவுகள்!
களிகொள் காமக் கதைப்பொத் தகங்கள்!
குளியல் பூச்சுகள்! நீச்சற் குளங்கள்!
பிறந்த மேனியாய்ப் பெண்டிரை ஆட்டும்
திறந்த அரங்குகள்! திக்குவாய் இசைகள்!

ஆண்பெண் உறவை அம்பல மாக்கும்
மாண்பிலாக் கதையின் மலிவிலை நூற்கள்! 150

வாய்வலி கண்டோன் வறுமொழிப் பாட்டைப்
பேய்இடு கூச்சலாய்ப் பிதற்றிடும் பண்கள்!

இத்தகு நாட்டின் இசைவிலா ஆட்சியால்
எத்தகு விளைவுகள் எதிர்ந்திடு மென்று
நல்லோர் ஒருசிலர் எண்ணி வருந்தி
அல்லும் பகலும் ஆராத் துயரினில்
மூழ்கிக் கிடப்பதை யாவரும் அறிவர்!
மாழ்கிக் கிடக்கும் மயக்கம் உற்றவர்
அறிகிலார் எனினும் அருள் உள் ளத்தால்
அறிஞர் யாவரும் அறிகுவர் அன்றோ! 160

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/105&oldid=1424701" இலிருந்து மீள்விக்கப்பட்டது