பக்கம்:கனிச்சாறு 2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  71


பொறியாய் எரியாய்க் கனலாய் அனலாய்க்
குறிபெறச் சிதறுக! புயலுருக் கொள்க!
பொய்ம்மையும் கயமையும் பொடிப்பொடி யாகுக!
மெய்ம்மையே யாண்டும் மேலுறப் பொலிக!
அற்றைத் தமிழக அன்புறு மக்கள்
இற்றை தமிழரை நினைந்தே இரங்கிக்
கடைவிழி ஒருதுளிக் கண்ணீர் வடிக்க! 200
விடையிதே அன்பர் விடுத்த அம் மடற்கே!

-1965


42  பூக்கட்டும் தமிழருளம்!

பூக்கட்டும் தமிழருளம்; புதுக்கட்டும் உணர்வை!
பொருந்திவராப் பழமைகளைப் பொசுக்கட்டும்; புதுமை
தேக்கட்டும் தம்மறிவில்; திகழட்டும் பொதுமை!
தீமையெல்லாம் படிப்படியாய் மடியட்டும்! நல்லார்
ஊக்கட்டும் உயரறத்தை; உயிர்க்கட்டும் பண்பே!
உரமுடையார். தம்நெஞ்சில் ஊறட்டும் ஆற்றல்!
காக்கட்டும் செந்தமிழைச் செந்தமிழர் நாட்டை!
கருதட்டும் தன்னுரிமை; கனியட்டும் வாழ்வே; 1

புலரட்டும் புதுப்பொழுது; பொன்வண்ணம் பாய்ந்து
பொலியட்டும் வானெல்லாம், கடல் மலைகள் எல்லாம்!
உலரட்டும் பழஞ்சோற்றுப் பொய்ச்சகதி யாவும்!
உறங்குகின்ற தமிழரெல்லாம் விழிக்கட்டும்! நெஞ்சில்
அலரட்டும் நல்லுணர்வு, பகுத்தறிவோ டாண்மை!
அயர்ந்திருந்த தோள்களெல்லாம் உயரட்டும்; மானம்
மலரட்டும்; சூழ்பகைமை மடியட்டும்! என்றும்
மங்காமல் ஒளிபெற்றுத் திகழட்டும் வாழ்வே! 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/107&oldid=1424703" இலிருந்து மீள்விக்கப்பட்டது