பக்கம்:கனிச்சாறு 2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


மணிவிழியின் இமைதிறந்து மங்கையரீர் வருக!
மாணிக்க இதழ்மலர்ந்து மாணவரீர் வருக!
அணியணியாய் இளைஞரெல்லாம் ஆர்வமிகக் கொண்டே
ஆர்ப்பரிக்கும் மறவரொடு போர்ப்படைக்கே வருக!
பணிபுரியுங் காலமிது; பைந்தமிழர் வாழ்க்கை
பறித்தெறிந்த கைகளையே முறித்தெறியும் காலம்!
துணிவதிர்ந்த தோள்களின் முன் பகைதூள் தூள் அன்றோ?
தோற்றவர லாற்றினை நாம் மாற்றிடுவோம் வாரீர்! 3

(வேறு)


ஏற்றுதற்கு விளக்கிருக்க இருள் சூழ்ந்த மனையுள்ளே
எந்தமிழர் இந்நாளில் வாழ்தலுற்றார்;
தேற்றுதற்கு வழியின்றித் திளைப்பதற்கு வாழ்வின்றித்
தேவையெனக் காலமெல்லாம் தேய்ந்துபோனார்!

ஆற்றுதற்குப் புலனறியாத் தலைவரெலாம் ஆளுக்கொன்
றன்னவர்பால் எடுத்தெடுத்துச் சொல்லலானார்!
மாற்றுதற்கு மனமிலையா? உரமிலையா? வழியிலையா!
மறநெஞ்சே விழித்தெழுவாய்! இன்றே! இன்னே!

-1965
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/108&oldid=1424704" இலிருந்து மீள்விக்கப்பட்டது