பக்கம்:கனிச்சாறு 2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


45  நெஞ்சு இனிக்குமா?

“எந்தமிழர் அரசேற்றார்; எடுத்தவினை
முடித்திட்டார்; இருளைச் சீய்த்தார்;
செந்தமிழை முடிவைத்தார்; செய்தொழிலால்
தமிழ் நிலத்தைச் சிறக்கச் செய்தார்;
தந்தபயன் அளவில்லை; தம்புகழ்க்கும்
வரையில்லை; தகவாம்” என்றே
எந்தநொடிச் செவிமடுப்போம்; இளைத்தவுடல்
பூரிப்போம்; இனிப்போம் நெஞ்சே!

-1966



46  அரசியல் குழப்பம்!

மொழித்தெளிவும் பெறமாட்டீர்! செய்தித்தாள்
சிறு நூல்கள் எல்லா வற்றும்
பழித்தவுரை வரைகின்றீர்! பண்பிழந்தே
எழுதுகின்றீர்! பணத்தைச் சேர்த்தீர்!
வழித்தெளிவும் கொளமாட்டீர்! அரசியலை
வளர்ப்பதுவாய்க் குழப்பு கின்றீர்!
விழித்தெழவும் விரும்புகிலீர்; என்னபயன்
விளைத்திடுவீர் தமிழ்நாட் டிற்கே!

-1966
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/110&oldid=1424707" இலிருந்து மீள்விக்கப்பட்டது