பக்கம்:கனிச்சாறு 2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


48  தானே அழியும் தமிழன்!

தமிழனைப் பிறர் யாரும்
தாழ்த்தவில்லை - அவன்
தம்பியே தாழ்த்துகின்றான்! - இந்தத்
தமிழனைப் பிறர் யாரும்
வீழ்த்தவில்லை - அவன்
தமையனே வீழ்த்துகின்றான்!

தமிழனைப் பிறர் யாரும்
சுரண்டவில்லை - இந்தத்
தமிழனே சுரண்டுகின்றான்! - இங்குத்
தமிழனைப் பிறர் யாரும்
கெடுக்கவில்லை - அவன்
தனயனே கெடுத்து நிற்பான்!

தமிழ்நாட்டைப் பிறர் யாரும்
ஆளவில்லை - இந்தத்
தமிழனே அடிமை தந்தான்! - இன்று
தமிழையும் பிறர் யாரும்
சிதைக்கவில்லை - இந்தத்
தமிழனே சிதைத்து நிற்பான்!

தமிழ்ப் பண்பைப் பிறர் யாரும்
குலைக்கவில்லை - இந்தத்
தமிழனே குலைத்து நிற்பான் - நல்ல
தமிழ்மானம் தனையாரும்
வாங்க வில்லை - இந்தத்
தமிழனே விற்றுவிட்டான்!

தமிழனைப் பிறர் யாரும்
வளைக்க வில்லை! - அட,
தமிழனே குனிந்து கொண்டான்! - இங்குத்
தமிழனைப் பிறர் யாரும்
ஏவவில்லை - இந்தத்
தமிழனே பணிந்து விட்டான்!

-1967
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/112&oldid=1424664" இலிருந்து மீள்விக்கப்பட்டது