பக்கம்:கனிச்சாறு 2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  77


49  தமிழர் திறம்....!

தமிழரிற் சிலருடை உள்ளமே தனிவகை!
அமிழ்தினும் இனித்திடும் அன்பையும் சொரிகுவார்;
அயர்ந்திடும் பொழுதினில் அகத்துவாள் செருகுவார்!

உயர்ந்திடும் வகையெனில் 'உயிர்' என நெருங்குவார்;
உழைப்பினைத் தருகெனில் ஊடலென் றொளிகுவார்!

அழைப்பினும் தவிர்ப்பினும் 'உரிமை' என் றலப்புவார்;
அகத்தினில் ஒன்றுவைத் தாயிரம் சிலம்புவார்!

முகத்தொடு முகம்படப் புரளினும் புரளுவார்;
முரண்படிற் பலர்வயின் முன்னவை கிளறுவார்!

'பரண்' அள வுயர்ந்ததைப் பாதையில் கிடத்துவார்!
பாதையில் எறிந்ததைப் பார்த்தெடுத் துயர்த்துவார்!

'தாதையும் அன்னையும் தமரும்நீர்' - என்பவர்;
தவறினைக் கடிந்திடில் ‘நீவிர்யார்' - என்னுவார்!

உவர்ப்பதும் இனிப்பதும் ஒன்றுதாம் என்பவர்;
உளங்கசந் தோமென உரைதரா தொதுங்குவார்!

குணங்களே காணுவார்; கோணலுற் றொதுங்கிடில்
குறைகளே பரப்பிநற் குணங்கெடத் தூற்றுவார்!

“அறைகுவோம்; - மக்களுக் கடிமை,யாம்; தொண்டினுக்
காவியோ டுடல்பொருள் ஆக்குவோம்” - எனப்பல

கூவுவார்; அரற்றுவார்; குவிபொருள் வாய்த்திடில்
தூவுவார் பழியுரை; தூற்றுவார்! அவர்திறம்
நாவினால் உரைக்கவும் உளம், உயிர் நடுங்குமே!

-1967
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/113&oldid=1424665" இலிருந்து மீள்விக்கப்பட்டது