பக்கம்:கனிச்சாறு 2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  79

வரிமேன்மேல் பெருகிற்று; நலத்தைக் காணோம்.
வாய் நிறையப் பேசுகின்றார்; செயலைக் காணோம்.
செரிமானக் குறைவுமுண்டு செல்வர் பாங்கில்!
சிக்கனஞ்செய் வார்பெண்கள் ஆடை தன்னில்!
அரிமாப்போல் முழங்கினிரே 'இந்தி'க்காக!
அந்நிலைதான் இன்றுவரை ஆனால் ஐயா,
வரிமாப் போர்; களிற்றுப்போர்! இரண்டாண் டின்முன்
வாய்த்ததொரு மாணவப்போர்! தமிழ்மொழிப்போர்! 5

‘தமிழியக்கம்' தந்தவரே! தமிழைக் காக்கத்
தமிழகத்து மாணவர்கள் எழுந்த காட்சி
சிமிழ்க்காத பெருமுனைப்பு! அடடா! அற்றைச்
சேரர்சோ ழப்படையோ பாண்டி நாட்டின்
குமிழ்த்தெழுந்த போர்முழக்கோ என்னு மாறு
கூடியதும் அலைத்ததுவும் தமிழைக் காக்க
அமிழ்தான உயிரிழந்த மாட்சிதானும்
அழியாத வரலாறு! சலியாக் காதை! 6

வெடிக்கின்ற துயராகத் தமிழ கத்தின்
வீழ்ச்சிபல இருந்தாலும், இக்கா லத்தும்
படிக்கின்ற மாணவர்க்குத் தமிழ்மேல் நாட்டம்
படிப்படியாய் மிகுந்துவரக் காண்கின் றேன்,நான்!
துடிக்கின்ற இளமையிலே அறிவு மேய்ச்சல்
தொடங்கிவிட்டால், செந்தமிழ்ப்பால் அருந்திவிட்டால்
அடிக்கின்ற புயல்காற்றும் ஒடுங்கிப் போகும்!
அடுத்துவரும் தலைமுறையும் நிமிர்ந்து நிற்கும்! 7

மெய்யாக உரைக்கின்றேன்; ஐயா, உங்கள்
மேனாளின் பேருழைப்பு - தமிழ்வே ளாண்மை
பொய்யாகப் போகாது; முளைத்துக் காய்த்துப்
புடைதிரண்டு கனிந்துபயன் தருதல் உண்மை!
உய்யாமல் நின்றிருந்த தமிழர் கூட்டம்
உணர்ந்தெழுந்து சிறப்பதுவும், இதுநாள் மட்டும்
எய்யாமல் இருந்தபெரும் புகழ்அனைத்தும்
எய்திடவாழ்ந் திருப்பதுவும் பெருத்த உண்மை! 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/115&oldid=1424667" இலிருந்து மீள்விக்கப்பட்டது