பக்கம்:கனிச்சாறு 2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  83


54  ஓ! திரைப்படக்காரரே !

ஓ!
திரைப்படக் காரரே!
திரைப்படக் காரரே!
புரைசெயும் குமுகாயப்
புழுக்களே! ஓ! ஓ!
கறைசெயும் மன்பதைக் கைகளே! இருளில்
மறைந்திருந் தென்றும் மக்களை உறிஞ்சிக்
கொழு கொழு வென்றே கொழுத்துத் திரியும்
தொழுநோய்ப் புழுக்களே! திரைப்படக் காரரே!

கதை - எனும் பெயரால் காமக் கழிசடைப்
புதையினுள் மூழ்கிப் புரண்டபட் டறிவால் -
கற்பனை என்னும் கசிகின்ற சீழை
ஓட்டைத் தூவலில் ஊற்றிக் கொண்டு 10
பெங்களூர் உதகை குற்றலாம் எனப்போய்த்
தங்கி யிருந்தே 'தறுதலை' மொழியில்
உளறிக் கொட்டி ஊர்கெடுப் போரே!
களரில் முளைத்த கள்ளிச் செடிகளே!

பாட்டு - எனும் பெயரால் படுக்கை யறையினில்
காட்டுக் கழுதைபோல் கட்டிப் புரண்ட
நிகழ்ச்சியை எல்லாம் நீட்டி முழக்கி
இகழ்ச்சி சேர்க்கும் இழிதகை யோரே!

இசை - எனும் பெயரால் கெக்கலி இரைச்சலைப்
பிசைந்து திரட்டி குரல்தின வடக்க 20
'ஏஏ' என்றும் ‘ஓஓ' என்றும்
கோவேறு கழுதைக் குரலில் ஒலித்து
வீட்டுக்கு வீடு விளங்குவா னொலியில்
காட்டுக் கூச்சலைக் காது புளிக்க
அளித்திடும் கயவரே! அரைகுறை மாந்தரே!
புளித்திடும் கழுநீர்ப் பானைவீழ் வோரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/119&oldid=1424671" இலிருந்து மீள்விக்கப்பட்டது