பக்கம்:கனிச்சாறு 2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

கொள்ளை யிடுபணம் கோடிக் கோடியாய்
மொள்ளைத் திரைப்படப் பிடிப்பினில் மூழ்க்க,
அவலுக்குப் பொக்கையன் அலைவது போல
இவளுக்கும் அவளுக்கும் இராப்பகல் அலைந்து 30
கட்டிலில் கண்டு காலைப் பிடித்துக்
கொட்டிக் கொடுத்துக் குமுகா யத்தைச்
சிதற அடிக்கும் முதலாளி மாரே!

நடிப்பெனும் பெயரால் - நள்ளிராப் பகல், படப்
பிடிப்பெனும் பெயரால் - பேய்மகள் ஒருத்திக்குத்
தொய்ந்திடு மார்பகம் தூக்கிக் கட்டிக்
கொய்த இளமை எய்த உடுத்தித்
துவண்ட இடையினைத் துவளா நிறுத்தி
அவல விழிக்கு மையிட் டெழுதி
குழிந்த கன்னத்து மண்குழை அப்பி 40
இழிந்த தோற்றத்தை எடுப்பாய்ப் புனைந்து

கெக்கலி செய்யும் கோணையன் ஒருவனோ
டொக்க நிறுத்தி “ஊஊ” வென்றே
ஊதற் காற்றில் உடல்நடுங் கிடல்போல்
மோதச் செய்வதும், முகத்தொடு முகத்தைத்
தேய்க்கச் செய்வதும், தேக்கிய நீரில்
பாயச் செய்வதும் அமெரிக்கப் பாணியில்
ஆடச் செய்வது மாக, - ஊர் கெடுக்கும்
பேடியர் பெற்ற பேடன் மாரே!
இயக்குநர் என்னும் வயக்கொடி யோரே! 50

தாயெனும் பெயரால் தகவிலா ஒருத்தி,
சேயெனும் பெயரால் பெற்றுப் போடக்
கன்னிப் பெண்ணாய்க் கனிந்த காலை,
சென்னைத் தெருக்களில் தன்னை விற்றுத்
திரைப்படப் பிடிப்பகம் கறைபட நுழைந்து
உரை, செயல், முதலா உடல்பொய்த் தொழுகி
செல்வம் புரளும் கைகளில் உருண்டே
அல்லும் பகலும் அரங்கம் ஏறி
மைவிழி சுழற்றி எழுது இமை நெரித்துப்
பொய்யின் புனைந்த மெய்படக் காட்டிக் 60
கணக்கிலாக் கயவோர் பிணைய உடன்பட்டு
மணங்கொள் பெண்டிர் மயக்குற ஆடிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/120&oldid=1424672" இலிருந்து மீள்விக்கப்பட்டது