பக்கம்:கனிச்சாறு 2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

யாவரும் கேட்க இதைஉரைக் கின்றேன்;
(மேவன செய்கலால் தேவரும் கயவரே!)

உங்களை நீங்களே ஒழித்துக் கொள்ளும்
கங்குல் உலகமே திரைப்பட உலகம்!

நீங்களும் உங்கள் திரைப்படப் பெண்டிரும் 100
யாங்ஙன மேனும் கட்டிப் புரளுக!
ஒப்புதல் இல்லா ஒழுங்கினால் நீவிர்
எப்படி யேனும் புழுத்துச் சாகுக!

ஆனால் உங்கள் அறைகளில் நடப்பதை
ஏனோ மக்க ளிடையிலும் காட்டி
இளையோர் மனத்திலும் தீயுணர் வெழுப்பிக்,
களைகளாம் எண்ணம் கனிய ஊன்றினிர்?
காசுகள் பறிக்கக் கயமையைக் காட்டி
மாசுகள் வளர்த்து மனங்குளிர் கின்றீர்!

காம நினைவினை எழுப்பலோ கலைகள்? 110
தீமையை விளைப்பதோ திரைப்படக் கூத்து?
குயிலொப்பப் பாடும் குரலினுள் ஒருத்தியை
நயமிலாது அலப்பச் செய்வதோ இன்னிசை?
சென்னைச் சேரியில் மொழிவதோ செந்தமிழ்?
என்ன பயன்களை இவற்றால் செய்குதிர்?
மலத்தினால் சந்தன மணம்கூட் டுவதோ?
நிலத்தினால் மழைநீர் நிறந்திரி யாதோ?

நாணம் அறுந்த நங்கையைக் கொண்டு
மானம் இன்றி மார்புக் கச்சையை
இறுக்கக் கட்டி எடுப்பாய்க் காட்டினால்
முறுக்கடை இளைஞரின் மனம்முறி யாதோ? 120

கடைகெட்ட சிறுக்கியர் காம உணர்வினால்
தொடையைக் காட்டினால் மனம்துவ ளாரோ?

அமெரிக்க நாட்டில் அப்படிச் செய்தால்
எந்தமிழ் நாட்டிலும் இப்படிச் செய்வதோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/122&oldid=1424675" இலிருந்து மீள்விக்கப்பட்டது