பக்கம்:கனிச்சாறு 2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

தெருத்தொறும் எங்கும் திரைப்பட விளம்பரம்!
பருத்துள மார்பகம்! பாதிமே லாடை!
இடைத்துணி நழுவிட இளிக்கும் பெண்களின் 160
தொடைதெரி வதுபோல் பெருஞ்சுவ ரொட்டிகள்!

துவண்டபெண் ஒருத்தியைத் தோள்மேல் தூக்கல்போல்
கவண்போல் இரண்டு கால்களை விரித்து
நீட்டிப் படுத்துள நிலையினில் ஒருத்தி -
ஏட்டில் இயம்பொணா இழிந்த காட்சிகள்!

திரைப்படச் செய்திகள் வெளியிடும் இதழ்களோ
சிரைத்த மயிர்த்திரள்! சேற்றில் மலக்குழை!
அட்டைப் படமுதல் அடுக்கடுக் காக
ஒட்டடைப் படைபோல் ஒவ்வொரு பக்கமும்
திரைப்பட நடிகையின் அரையுடைத் தோற்றம்! 170
உரைகளே - அவர்தம் உணவுகள், உடைகள்,
புனைவுகள், திருமணப் புனைந்துரை, வாழ்க்கை,
கனவு நினைவுகள், கருக்கொண்ட செய்திகள்
இன்னும் பலப்பல இழிவுபற் றியன!
இன்ன செய்தியால் விளைகின்ற தென்ன?
மக்கள் பெறுகின்ற மன இழிவு எத்தனை?
தக்கவோர் மன்பதை உருவா கிடுமோ?

இன்ன கழிசடை இதழ்களை நடத்துவோர்
அன்ன செய்தியால் பயன்பெறல் அல்லால் -
விளம்பரப் பயனால் நடிக நடிகையர்
வளம்படல் அல்லால், வருகின்ற பயன்ஓர்
எள்மூக் கத்துணை - எறும்புமூக் கத்துணை
மக்களுக் காகிலும் நாட்டுக் காகிலும்
தொக்கக் கிடைக்குமா? துயரன்றோ மிச்சம்!
திரைப்படத் துறையே கறைப்பணத் தொட்டி!
வரைபடத் திருத்துதல் கடினம் என்பதால்
குறைகளை மலையாய்க் குவிய விடுவதா?
கறைகளைக் கலையெனப் போற்றிக் காப்பதா?

வெள்ளிப் பணத்தை வீசுவ தாலே
குள்ளச் செய்கைக்கு யாவரும் குனிவர் 190
என்பதற் காகப் பண்பை இழப்பதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/124&oldid=1424677" இலிருந்து மீள்விக்கப்பட்டது