பக்கம்:கனிச்சாறு 2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


 “சௌந்தர ராசனை” திரைப்பட இழிஞர்
எந்தப் பாடலைப் பாடச் செய்வது?
இழுப்பு வந்தவன் இசைபோல் இழுத்திடும்
மழுக்குடைப் பாட்டையா பாடச் செய்வது?
பணம் வரும் என்று, இப்பாடகர் தாமும்
பிணவுநாய் ஊளைபோல் முக்கித் தீர்ப்பதா? 230

'எலந்தப் பயம்' எனும் பாடலைப், பெண்மை
நலந்தவிர் ஒருத்தி நடுத்தெரு வினிலே
பாடியும் ஆடியும் பழம்வி பதுபோல்
ஓடும் திரைப்படக் காட்சி ஒன்றிலே
வெறுப்புற - பெண்கள் வெட்க முறும்படி
உறுப்புகள் காட்டி அருவருப் பாகத்
தோன்றிய தன்மையில் வெளிநாடு தோற்றது!
கான்றுமிழ் கின்ற அக் காட்சிக் காகவும்
பண்பி லா அப் பாட்டிற் காகவும்
எண்ணிலா இளையோர் பன்முறை பார்த்தனர்! 240
பெண்டிரைத் தாழ்த்திடும் பண்பிலாக் காட்சியால்
மண்டிய செல்வம் சுரண்டிடும் கயமை
நாளுக்கு நாளாய் நந்தமி ழகத்தில்
வாளுக்கு நஞ்சுபோல் வளர்ந்திட லானதே!

பார்க்க வருகிறார் என்பதால் பண்பினைத்
தூர்க்க முயல்வதோ? தொலைக்க முனைவதோ?
“பார்க்கவிழை கின்றனர்” என்பதும் பழுதுரை!
ஆர்த்த பழங்காலத் திரைப்பட இசைகளைக்
கேட்டு மகிழாத செவிகள் இருக்குமா?
ஆட்டமும் கூத்தும் அவற்றில் இல்லையா? 250
கதைகள் இல்லையா? காட்சிகள் கொஞ்சமா?
புதைந்த கருத்துகள் எத்தனை? எத்தனை?
நடிப்புகள் சோடையா? பிடிப்பினில் குறையா?
உடுப்புகள் எத்தனை ஒழுங்கொடு திகழ்ந்தன?

தியாக ராசப் பாடகர் முன்னம்,
வயங்கு கண்ணாம்பா, சின்னப்பா எதிரில்,
நகைச்சுவை யரசர் கிருட்டிணன் பக்கம்,
பகை கொளும் நடிப்பில் பாலையா தம்முடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/126&oldid=1424679" இலிருந்து மீள்விக்கப்பட்டது