பக்கம்:கனிச்சாறு 2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


55  திருவள்ளுவர் விழாவா?

திருக்குறள் பிறந்திரண் டாயிர மாண்டுகள்
சென்றன; எனினும் செந் தமிழா,
இருக்கு முன் நிலையினில் இமி உயர்ந் தனையா?
இழிவிலை யா? உடல் சிமிழா?

பிறப்பினில் உயர்வுதாழ் வொழிந்ததா? அட,ஓய்!
பேசினை எழுதினை விறைப்பாய்!
மறப்பிலை தம்பி,உன் மடத்தனம், கயமை
மற்றெதற் கோ விழா, சிறப்பாய்?

பசியொழித் தனையா? பிணியொழித் தனையா?
பகைப்புலம் வேரறுத் தனையா?
வசிக்கவும் குடிலிலா வாடுவோர் தமக்கே
வாழ்விலை! உயிரென்ன தினையா?

ஏய்ப்பவர் ஒருபால்; மேய்ப்பவர் ஒருபால்;
ஏழையர் துடித்தனர் அவர்பால்!
காய்ப்பதிங் கொருபால்! கனிவதிங் கொருபால்!
காய்பவர் பெறுவதிங் கெவர்பால்?

சொல்லுதல் எளிது; செய்தலே உயர்வெனச்
சொல்லிற் றடா, நம் முப்பால்!
வெல்லுநாள் அன்றோ விழாக்கொண் டாட்டம்!
வினையடா, விளைவடா இப்பால்!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/130&oldid=1424683" இலிருந்து மீள்விக்கப்பட்டது