பக்கம்:கனிச்சாறு 2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


57

பாய்புலியே! எங்கே உன் சீற்றம்?


இன்னமும் எத்தனை யாண்டுகள் தமிழா
இங்ஙனே உணர்வற்றிருப்பாய்? - நீ
இங்ஙனே உணர்வற்றிருப்பாய்?


1.தின்னும் இனப்பகை உன்றனை மாய்த்தது;
தீராத மடமைநின் இனத்தையே சாய்த்தது;
மன்னும் அடிமையா வாழ்வென வாய்த்தது?
மாளாத துயரையா உன்மரம் காய்த்தது? (இன்)

2.வள்ளுவர் பிறந்தும்ஈ ராயிரம் ஆண்டுகள்
வந்தன; போயின; எத்தனைத் தாண்டுகள்?
கொள்ளுமுட் பகைகளே அடிமையின் கூண்டுகள்;
கூடினை யாயின் உன் பகைவரோ பூண்டுகள்! (இன்)

3.எத்தனை எத்தனை விடுதலைப் பாட்டுகள்!
இற்றன வோ உன்றன் கல்மனப் பூட்டுகள்!
ஒத்தெழுந் தனையெனில் என்செயும் வேட்டுகள்?
உடைந்து தூள் ஆகாவோ பகைவர்கால் மூட்டுகள்? (இன்)

4.குலப்பிரி வின்னமும் உனைவிட்ட தில்லையே!
கூறுகூ றாய்ப்பிரிந் திருப்பதால் தொல்லையே!
மலப்புழுப் போலேனும் நெளிந்தாயா? இல்லையே!
மனத்துவை; மறவாதே! உனக்கிது எல்லையே! (இன்)

5.மாந்தரின் இனத்துளே முதலவன் நீதான்!
மற்றிந்நாள் உலகினில் கடையவன் நீதான்!
வேந்தனாம் அன்று நீ எனின், இன்றோர் ஈதான்,
வெட்கிலை யாமனம்? பிறர்க்கு நீ ‘சீ’ தான்! (இன்)

6.பிறர்க்கிலா இலக்கிய இலக்கணங் கொண்டனை!
பின்வரும் உலகுக்கும் அறம்முன்பே விண்டனை!
மறக்கிலா ஒளிவாழ்வும் முன்பே நீ கண்டனை!
மற்றதற் கோ இந்நாள் அடிமையாந் தண்டனை? (இன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/132&oldid=1437301" இலிருந்து மீள்விக்கப்பட்டது