பக்கம்:கனிச்சாறு 2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


59  அன்புத் தமிழனே!

அன்புத் தமிழனே! அடிமைப் பிறவியே!
என்பு நெகிழ இதைஉரைக் கின்றேன்;
சற்றே உன்செவி சாய்த்துக் கேட்பாய்,
முற்றும் எண்ணுவாய்; முடிவொன்று காண்பாய்!

எத்தனைக் காலம் நீ இழிந்து கிடப்பது?
புத்தனைக் கண்டாய்; ஏசுவைப் பற்றினாய்!
சிவனியம் புகுந்தாய்; மாலியந் தழுவினாய்!
மொட்டைத் தலைக்கொரு மூடு கவிழ்த்து
முகமதி யன்என முழுப்பெயர் மாற்றினாய்!
ஊர்விட் டோடினாய்; உலகெலாம் பரந்தாய்;
மலையமும் இலங்கையும் நிலையிலா தோடினாய்!
அலையா யலைந்தாய்; ஆக்கமுந் தேடினாய்.

ஆயினும் நீயோர் ஆரிய அடிமையே!
நாயினும் புழுவினும் நலியும் பிறவியே!
முழுமையாய் நீ ஒரு மூடக் களஞ்சியம்.
பழமைச் சடங்கின் குப்பைக் குழி நீ!

வெள்ளைக் காரனின் விளங்கிய அறிவு
கொள்ளை கொள்ளையாய்க் குவிதலைக் கண்டும்
மண்ணிலும் விண்ணிலும் மற்றைய துறையிலும்
திண்ணிய ஆய்வினில் தேர்ந்ததை அறிந்தும்
உன்னை ஒருபடி உயர்த்திக் கொள்ள
எண்ணம் இன்றி இருக்கின் றாயே!

இன்னமும் பார்ப்பான் எழுதிய பொய்யையும்
பின்னி யுரைத்த புராணப் புளுகையும்
உண்மை என்றே உளமார நம்பிப்
பொன்னையும் பொருளையும் கொட்டிக் கொடுப்பாய்!
பார்ப்பான் காலில் பதவிக்கு விழுவாய்;
ஊர்க்குள் அவனையே உயர்த்தி என்கிறாய்!
குலச்செருக் கின்னும் குலைந்திட வில்லை.
பலவேறு சமயமும் உனைப்பாழ் படுத்திடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/136&oldid=1424757" இலிருந்து மீள்விக்கப்பட்டது